திருவெண்ணெய்நல்லூர் அருகே பதற்றம் தலித்களை காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்த பஞ்சாயத்தார்: 2 பேர் அதிரடி கைது

திருவெண்ணெய்நல்லூர்: திருவெண்ணெய்நல்லூர் அருகே தலித்துகள் 3 பேரை பஞ்சாயத்தார் முன் மண்டியிட்டு மன்னிப்பு கேட்க வைத்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள ஒட்டனந்தல் தலித் கிராமத்தில் கடந்த 9 முதல் 12ம் தேதி வரை மாரியம்மன் கோயில் திருவிழா நடைபெற்றது. இதில் ஆடல், பாடலுடன் பாட்டுக்கச்சேரி நடந்தது. இதுபற்றி மாற்று சமூகத்தைச் சேர்ந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து திருவெண்ணெய்நல்லூர் போலீசார் சென்று பாட்டுக் கச்சேரி நடத்தியவர்களை எச்சரித்துவிட்டு, ஒலிபெருக்கி உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.இதையடுத்து காவல் நிலையத்தில் சமரச பேச்சுவார்த்தை நடத்தி அனைத்து பொருட்களையும் பெற்றுச் சென்றனர்.

இதனிடையே இந்த சம்பவம் தொடர்பாக இருபிரிவினருக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனை சரி செய்ய பஞ்சாயத்து பேசப்பட்டது. அதில் சம்பந்தப்பட்ட தலித் சமூகத்தை சேர்ந்த 3 பேர் மன்னிப்பு கேட்டால் மட்டுமே பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என்று கூறியதையடுத்து 3 பேரும் பஞ்சாயத்தார் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுள்ளனர். இதுகுறித்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

அதைத்தொடர்ந்து மேல் அதிகாரிகளின் உத்தரவின் பேரில் 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அதில் 2 பேரை நேற்று கைது செய்தனர்.

தகவல் அறிந்த அவர்களின் உறவினர்கள், திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். இருவரையும் போலீசார் கொரோனா பரிசோதனைக்கு அழைத்துச் செல்ல விடாமல் வாகனத்தின் முன்பு அமர்ந்து தர்ணா செய்தனர். எஸ்பி ராதாகிருஷ்ணன் வந்து பேச்சுவார்த்தை நடத்தியபின் கலைந்து சென்றனர். பின்னர் கலெக்டர் அண்ணாதுரை, எஸ்பி ராதாகிருஷ்ணன், வட்டாட்சியர் ஆனந்தன் ஆகியோர் ஒட்டனந்தல் கிராமத்திற்கு சென்று இருபிரிவு மக்களையும் தனித்தனியே அழைத்து பேசினர்.

Related Stories: