கேரளாவில் இன்று அமலாகிறது தொற்று பரவலை கட்டுப்படுத்த உதவும் மும்மடங்கு ஊரடங்கு

திருவனந்தபுரம்: கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதில் பெரிய அளவில் கைகொடுக்கும் மும்மடங்கு முழு ஊரடங்கு கேரளாவில் 4 மாவட்டங்களில் இன்று அமல்படுத்தப்பட உள்ளது. கேரளாவில் கடந்த ஆண்டு கொரோனா முதல் அலையின் போது, வைரஸ் தொற்று தீவிரமாக இருந்த காசர்கோடு மற்றும் திருவனந்தபுரத்தில் மும்மடங்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கு மிகச்சிறந்த வெற்றியை தந்தது. ஊரடங்கு அமல்படுத்திய 2 வாரத்தில் வைரஸ் பரவல் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டது.இந்நிலையில், கேரளாவில் தற்போது 2வது அலையிலும் வைரஸ் பரவல் தீவிரமாகி உள்ளது. இதனால், வரும் 23ம் தேதி வரை அங்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், நோய் பரவல் அதிகமுள்ள திருவனந்தபுரம், எர்ணாகுளம், திருச்சூர் மற்றும் மலப்புரம் ஆகிய 4 மாவட்டங்களில் மும்மடங்கு முழு ஊரடங்கு இன்று நள்ளிரவு முதல் ஒரு வாரத்திற்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

மும்மடங்கு ஊரடங்கு குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியிருப்பதாவது:

லாக் 1: 4 மாவட்டத்தில் இருந்து யாரும் வேறு மாவட்டத்திற்கு செல்லக் கூடாது, வேறு மாவட்டத்தில் இருந்து யாரும் இங்கு வரக்கூடாது. மாவட்ட எல்லையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும். அவசர சேவைகளுக்கு மட்டும் அனுமதி உண்டு

லாக் 2: மாவட்டங்களில் பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் கட்டுப்படுத்தப்பட்ட மண்டலங்கள் அமைக்கப்படும். அங்கு போலீசார் நிறுத்தப்பட்டு ஒரே வழியில் அப்பகுதிக்கு செல்லவும், வெளியேறவும் நடவடிக்கை எடுக்கப்படம். மக்கள் வீடுகளிலேயே இருக்க அறிவுறுத்தப்படுவர். மருத்துவமனை, மருந்து கடைகள் மட்டும் செயல்படும். மளிகை, உணவு போன்றவை வீடுகளுக்கே நேரடியாக சென்று விநியோகிக்கப்படும். அவசர தேவையை தவிர மக்கள் யாரும் வெளியில் வரக்கூடாது.

லாக் 3:  வைரஸ் பாதித்த வீட்டில் உள்ளவர்கள் கட்டாயம் வெளியில் வரக்கூடாது. அவர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட பொருட்களை போலீசாரும், உள்ளாட்சி நிர்வாகமும் ஏற்பாடு செய்யும். தொற்றுள்ள நபர்களின் மொபைல் எண் பெற்று அதன் மூலமும் சம்மந்தப்பட்ட நபரின் நடமாட்டம் கண்காணிக்கப்படும். இதுபோன்று மும்மடங்கு ஊரடங்கு இன்று அமலுக்கு வருகிறது. இவ்வாறு தெரிவித்தனர்.

Related Stories: