கொரோனா முதல் அலைக்கு பின் அரசின் அலட்சியத்தால் நெருக்கடி ஏற்பட்டுள்ளது: ஆர்எஸ்எஸ் தலைவர் குற்றச்சாட்டு

புதுடெல்லி: ‘கொரோனா முதல் அலைக்குப் பின் அரசும், மக்களும் அலட்சியமாக இருந்ததே 2வது அலையில் மருத்துவ நெருக்கடிக்கு அழைத்துச் சென்றது’ என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் குற்றம்சாட்டி உள்ளார். கொரோனா 2வது அலையில் மக்களிடம் நேர்மறை எண்ணங்களை உருவாக்க ‘பாசிடிவிட்டி அன்லிமிடெட்’ என்ற பெயரில் சமயம், ஆன்மீகம், தொழில் துறையை சேர்ந்த தலைவர்களின் மெய்நிகர் சொற்பொழிவிற்கு ஆர்எஸ்எஸ் அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. கடந்த 5 நாட்கள் நடந்த இச்சொற்பொழிவின் இறுதி நாளான நேற்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பேசினார்.அவர் கூறுகையில், ‘‘கொரோனா முதல் அலைக்குப் பிறகு அனைத்து தரப்பினரும் அலட்சியமாகி விட்டனர். அரசும், மக்களும் அலட்சியமாக இருந்ததால் நம்மை மருத்துவ நெருக்கடிக்கு இட்டுச் சென்றுள்ளது.

2ம் அலை வரும் என டாக்டர்கள் எச்சரித்தும் அலட்சியமாக இருந்துள்ளோம். தற்போது 3ம் அலை வரும் என்கிறார்கள். அதைப் பார்த்த நாம் பயப்படப் போகிறோமா? அல்லது நேர்மறை எண்ணத்துடன் எதிர்த்து போராடப் போகிறோமா?  தற்போது நாம் பெற்ற அனுபவத்தின் மூலம் நாட்டு மக்கள் கொரோனாவுக்கு எதிராக நேர்மறை எண்ணத்துடன் போராடச் செய்வதற்காக ஆர்எஸ்எஸ் அமைப்பு தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்திய மக்கள் கொரோனாவுக்கு எதிராக முழுமையான வெற்றி பெற வேண்டும்’’ என்றார்.

Related Stories: