பிரதமர் மோடி அறிவுறுத்தல் கிராமப்புறங்களில் வீடு வீடாக பரிசோதனை: சுகாதார வசதிகளை அதிகரிக்க உத்தரவு

புதுடெல்லி:  ‘கிராமப்புறங்களில் வீடு வீடாக சென்று சோதனை மற்றும் கண்காணிப்பதில் கவனம் செலுத்த வேண்டும்’ என பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். கொரோனா பரவல் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் மற்றும் தடுப்பூசி மேலாண்மை தொடர்பாக பிரதமர் மோடி அரசு உயரதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில் பிரதமர் மோடி கூறியிருப்பதாவது: கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கைகளில் எந்தவொரு அழுத்தமும் இல்லாமல் மாநில அரசுகள் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். கிராமப்புறங்களில் ஆக்சிஜன் செறிவூட்டல் உட்பட ஆக்சிஜன் விநியோகத்தை உறுதி செய்வதற்கான விநியோக திட்டத்தை உருவாக்க வேண்டும். இதுபோன்ற மருத்துவ உபகரணங்களை இயக்குவதற்கு சுகாதார பணியாளர்களுக்கு தேவையான பயிற்சி அளிக்கப்பட வேண்டும். மேலும் இது போன்ற மருத்துவ சாதனங்களை சீராக இயக்குவதற்கு ஏதுவாக மின்சார விநியோகத்தையும் உறுதி செய்ய வேண்டும்.

கொரோனா முதல் அலையின்போது கிராமப்புறங்கள் பாதிக்கப்படவில்லை. ஆனால் தற்போது இரண்டாவது அலையில் பல்வேறு மாநிலங்களில் கிராமப்பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றது.  ஆர்டி-பிசிஆர் மற்றும் ரேபிட் சோதனை ஆகிய இரண்டையும் பயன்படுத்துவதன் மூலமாக சோதனைகள் அதிகரிக்கப்பட வேண்டும். மார்ச் மாத தொடக்கத்தில் 50 லட்சம் சோதனைகள் நடத்தப்பட்ட நிலையில் தற்போது வாரத்துக்கு 1.3 கோடி கொரோனா பரிசோதனைகள் செய்யப்படுகின்றது. கிராமப்புறங்களில் வீடு வீடாக சென்று சோதனை மற்றும் கண்காணிப்பதில் கவனம் செலுத்துவதற்கான சுகாதார வசதிகளை அதிகப்படுத்த வேண்டும். மாநிலங்களில் கொரோனா நோய் தொற்று அதிகம் இருக்கும் மாவட்டங்களில் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள்  காலத்தின் தேவையாகும். இவ்வாறு மோடி கூறினார்.

கறுப்பு பூஞ்சை பாதிப்பு அரசுக்கு தெரிவிக்க உத்தரவு

கொரோனா தினசரி பாதிப்பு விகிதம் மகாராஷ்டிரா, டெல்லி, குஜராத் போன்ற மாநிலங்களில் குறையத் தொடங்கியிருப்பதாக எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார். அதே சமயம், கொரோனாவிலிருந்து குணமடைந்தோருக்கு ஏற்படும் கறுப்பு பூஞ்சை எனும் மியூகோர்மைகோசிஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறதாக தெரிவித்துள்ளார். இதனால் கொரோனா பாதிப்பில் உள்ளவர்கள் தேவையின்றி அதிகப்படியான மருந்துகளை எடுத்துக் கொள்ள கூடாது என்றும் அவர் அறிவுறுத்தி உள்ளார். கறுப்பு பூஞ்சை பாதிப்பு இருந்தால் உடனடியாக அது குறித்து மருத்துவமனைகள் அரசுக்கு தெரிவிக்க வேண்டுமென அரியானா மாநில சுகாதார அமைச்சர் அனில் விஜ் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: