தொழிலதிபரின் மகன் என்பதை காட்டிக் கொள்ளாமல் தந்தைக்கு பணிவிடை செய்ய வார்டு ஊழியராக மாறிய மகன்: 6 நாட்கள் உடனிருந்தும் தந்தையை காப்பாற்ற முடியவில்லை

லக்னோ: உத்தபிரதேச தொழிலதிபரின் மகன் என்பதை காட்டிக் கொள்ளாமல், தந்தைக்கு பணிவிடை செய்ய வார்டு ஊழியராக பணியில் சேர்ந்த மகனை பலரும் பாராட்டுகின்றனர். உத்தரபிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்த தொழிலதிபர் சுரேஷ் பிரசாத் என்பவருக்கு கொரோனா தொற்று இருந்ததால், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனத்தின் (டிஆர்டிஓ) தற்காலிக கொரோனா வார்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டிஆர்டிஓ நிர்வாகத்தின் கீழ் செயல்படும் மருத்துவமனை என்பதால், கண்காணிப்புகள் அதிகமாக இருக்கும். நோயாளிகளை அவ்வளவு எளிதாக சென்று பார்த்துவிட முடியாது.

இந்நிலையில், தொற்று பாதிப்பால் சிகிச்சை பெற்று வரும் சுரேஷ் பிரசாத்தின் மகன் சந்தன், நோய்வாய்ப்பட்ட தனது தந்தையை சந்திக்க ஒவ்வொரு நாளும் மருத்துவமனைக்குச் செல்வது வழக்கம். ஆனால், ஒவ்வொரு முறையும் அவரை மருத்துவமனைக்குள் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள். பெருத்த ஏமாற்றத்துடனே சந்தன் திரும்பி வருவார். அவரது தந்தையுடன் தொலைபேசியில் கூட அவரால் பேச முடியவில்லை. மருத்துவமனையின் உள்ளே பணியாற்றும் சிலருடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு, அவர்கள் மூலம் தந்தையின் உடல்நிலைய அறிய முற்பட்டார். ஆனால், அதிலும் அவருக்கு முழுமையான தகவல்களை சேகரிக்க முடியவில்லை.

அதனால், நாளுக்கு நாள் மிகுந்த கவலையில் சந்தன் இருந்தார். சில நாட்களுக்கு பின்னர், தந்தையிடம் இருந்து மகனுக்கு ஒரு செய்தி வந்தது. அதாவது, ‘நான் தனிமையாக உள்ளேன். என்னை மருத்துவமனையில் கவனித்துக் கொள்ள யாரும் இல்லை. அதனால், நான் வீட்டிற்கு வர விரும்புகிறேன்’ என்று கூறியுள்ளார். மகிழ்ச்சியடைந்த சந்தன், மருத்துவமனை நிர்வாகத்திடம் தனது தந்தையை டிஸ்சார்ஜ் செய்யும்படி கேட்டார். ஆனால் அவர்கள் சுரேஷ் பிரசாத்தை தற்போதைய நிலையில், மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்ய முடியாது என்றும், அவர் வென்டிலேட்டர் உதவியுடன் இருப்பதாகவும் தெரிவித்துவிட்டனர்.

இதனால், மன அமைதியிழந்த நிலையில் இருந்த சந்தன், மருத்துவமனையின் வார்டு ஊழியராக பணியாற்ற மூத்த அதிகாரிகளிடம் விருப்பம் தெரிவித்தார். அவர்களும், தற்காலிக ஊழியராக பணியாற்ற அனுமதி கொடுத்தனர். ஆனால், சந்தனுவின் தந்ைத மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது மூத்த அதிகாரிகளுக்கு தெரியாது. பின்னர் பணியில் ேசர்ந்த சந்தனு, மற்ற நோயாளிகளுக்கு சேவையாற்றுவது போலவே, தனது தந்தைக்கும் மருத்துவ சேவையாற்றினார். கழிப்பிடங்களை சுத்தம் செய்வதில் இருந்து, வார்டில் உள்ள அனைத்து வேலைகளையும் செய்தார். தனது தந்தையுடன் அதிக நேரம் செலவிட விரும்பிய சந்தன், ஒரு நாளைக்கு 16 மணி நேரம் மருத்துவமனையிலேயே பணியாற்றினார்.

அதிக வேலை பளு காரணமாக, சந்தனின் காலில் கொப்புளங்கள் ஏற்பட்டன. இவர், பணியில் சேர்ந்த 6 நாட்களுக்குப் பிறகு, அவரது தந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தான் தொழிலதிபரின் மகன் என்பதை மூட்டை கட்டிவைத்துவிட்டு, மருத்துவமனை வார்டு ஊழியராக பணியில் சேர்ந்த சந்தனை, மருந்துவமனை அதிகாரிகள் வெகுவாக பாராட்டினர். எத்தனை கெடுபிடிகள் இருந்தும், தந்தைக்கு ஆற்றவேண்டிய கடமையை ஒரு மகனாக கடைசி நேரத்தில் உதவிய சந்தன், மற்றவருக்கு ஓர் முன் உதாரணமான மனிதராக பாராட்டப்பட்டு வருகிறார்.

Related Stories:

>