சென்னையில் முதியவர்களுக்கு உதவும் வகையில் கொரோனா கட்டுப்பாட்டு மையம்: சென்னை காவல்துறையினரின் புதிய முயற்சி

சென்னை: சென்னையில் தனியாக வசிக்கும் முதியவர்களுக்கு உதவும் வகையில் கொரோனா கட்டுப்பாட்டு மையம் உருவாக்கப்பட்டுள்ளது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக முழு ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு பொதுமக்கள் நடமாட்டத்தை கண்காணிக்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

ஊரடங்கு காலத்தில் வெளியே வர முடியாத நிலை இருப்பதால் வீட்டில் தனியாக இருக்கும் முதியவர்கள் மற்றும் ஆதரவற்ற முதியவர்களின் உதவிக்காக என்று தனியாக கட்டுப்பாட்டு மையம் சென்னையில் உருவாக்கப்பட்டுள்ளது. சென்னை கிழக்கு மண்டல இணை ஆணையர் பாலகிருஷ்ணன் புதிய முயற்சியில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த கட்டுப்பாட்டு அறை முதற்கட்டமாக கிழக்கு மண்டலத்தில் உள்ள மைலாப்பூர், திருவல்லிக்கேணி, கீழ்ப்பாக்கம் ஆகிய பகுதிகளில் வசிக்கும் முதியவர்களுக்கு உதவும் வகையில் தலைமை செயலக காவல் ஆய்வாளர் சரோஜினி தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டுப்பாட்டு மையத்தை அணுக தொலைபேசி எண்ணையும் (044-23452221) சென்னை காவல்துறை அறிவித்துள்ளது. அத்துடன் கிழக்கு மண்டல பகுதியில் வசிக்கும் 1005 முதியவர்களை கட்டுப்பாட்டு அறையிலிருந்து போலீசாரே தொடர்பு கொண்டு உதவி ஏதேனும் தேவைப்படுகிறதா என கேட்டறிந்து உதவி வருவதாகவும் கூறி வருகின்றனர். அவர்களுக்கு தேவையான உணவு, உடை, மருந்துகள் வங்கி தருவது, தடுப்பூசிகள் செலுத்துவதில் உதவுவது மற்றும் உடல்நலம் பாதிக்கப்பட்டால் மருத்துவமனையில் அனுமதிப்பது உள்ளிட்ட உதவிகளை காவல்துறையினர் செய்து வருகின்றனர். சென்னை காவல்துறையினரின் இந்த புதிய முயற்சிக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பெரும் வரவேற்பும் பாராட்டும் குவிந்து வருகின்றன.

Related Stories:

>