×

கோவை, சேலம், மதுரை, திருச்சியில் விரைவில் கொரோனாவுக்கான கட்டளை மையம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

கோவை: கோவை, சேலம், மதுரை மற்றும் திருச்சியில் விரைவில் கொரோனாவுக்கான கட்டளை மையம் திறக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மா.சுப்பிரமணியன் தலைமையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் உணவுத்துறை அமைச்சர் சக்ரபாணி, வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், கோவை நாடாளுமன்ற உறுப்பினர் வி.ஆர்.நடராஜன் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட 9 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கலந்து கொண்டனர்.

அப்போது கோவையில் வேகமாக பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மா.சுப்பிரமணியன் சென்னையை போலவே கோவை, சேலம், மதுரை மற்றும் திருச்சியிலும் வார் ரூம் எனப்படும் கட்டளை மையம் அமைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக கூறினார்.

பொடீசியா தொழில் வளாகத்தில் 1,500 படுக்கைகள் கொண்ட கொரோனா பராமரிப்பு மையம் தயார் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மா.சுப்பிரமணியன் கூறினார். அதில் 700 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. மேலும் 800 படுக்கைகள் அமைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்தார். கொடீசியாவில் 100 படுக்கைகள் கொண்ட வசதியோடு சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி உள்ளிட்ட இயற்கை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட இருக்கிறது. கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் தன்னார்வ அமைப்புகள் மூலம் ஆக்சிஜன் கலன்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மா.சுப்பிரமணியன் கூறினார். கோவை அரசு மருத்துவமனையில் ஜீரோ டிலே என்ற முறையில் ஆம்புலன்சில் வருவோருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.



Tags : Corona Command Centre ,Coai, Salem, Madurai, Tiruchi ,Minister ,Ma ,Subramanian , corona
× RELATED அமைதிப்பூங்காவான தமிழகம் என மீண்டும்...