விழுப்புரம் அருகே 3 பெரியவர்களை காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்த சம்பவத்தால் அதிர்ச்சி

விழுப்புரம்: விழுப்புரம் அருகே கோயிலில் விழா நடத்தியதற்காக ஊர் கூட்டத்தில் ஒரு பிரிவு முதியவர்களை மற்றொரு பிரிவினர் காலில் விழவைத்து மன்னிப்பு கேட்க செய்தது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் திருவேணிநல்லூர் அருகேயுள்ள ஒட்டினந்தல் கிராமத்தில் தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அங்குள்ள மாரியம்மன் கோவிலில் கடந்த 12ஆம் தேதி ஒரு பிரிவினர் கூழ்வார்த்தல் திருவிழா நடத்தியுள்ளனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள மற்றொரு பிரிவினர் விழா நடத்திய தரப்பிலிருந்த 3 முதியவர்களை ஊர் கூட்டத்தில் பல்வேறு நபர்கள் முன்னிலையில் காலில் விழவைத்து மன்னிப்பு கேட்க வைத்துள்ளனர். அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த வீடியோ காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

மன்னிப்பு கேட்க வைத்ததோடு இல்லாமல் எதிர்தரப்பினருக்கு கொலைமிரட்டலும் விடுக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. சம்பவம் தொடர்பாக இருதரப்பிலும் திருவேணிநல்லூர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலீசார் வழக்கு பதியாமல் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: