கிலோ ரூ.2க்கு கேட்பதால் தோட்டத்திலேயே வீணாகும் செண்டுமல்லி

ஓசூர்: கொரோனா பரவலால் ஓசூர் பகுதியில் பூக்கள் அறுவடை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், தோட்டத்திலேயே வீணாகும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் பரவலாக மலர் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கொரோனா பரவல் அதிகரிப்பால் பூக்களை விற்பனைக்கு அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் அறுவடை பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பூக்களை பறிக்காமல் தோட்டத்திலேயே விட்டுள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘ஓசூர் பகுதியில் பசுமை குடில்கள் மற்றும் திறந்தவெளியில் சுமார் 1000 ஏக்கர் பரப்பளவில் ரோஜா, சாமந்தி, செண்டுமல்லி, குண்டுமல்லி உள்ளிட்ட பலவிதமான மலர் செடிகளை சாகுபடி செய்து வருகிறோம்.

நாட்டில் கொரோனா 2வது அலை வேகமெடுத்துள்ளதால் பூக்கள் விற்பனை சரிந்துள்ளது. மேலும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், பூக்கள் விலை குறைந்துள்ளது. செண்டுமல்லியை கிலோ ₹2க்கு கேட்பதால் பூக்களை பறிக்காமல் தோட்டத்திலேயே விடும் நிலைக்கு ஆளாகியுள்ளோம். எங்கள் கண் முன்பே பூக்கள் அழுகி வீணாகி வருவது ரத்தக் கண்ணீரை வரவழைப்பதாக உள்ளது,’ என்றனர்.

Related Stories:

>