குடியாத்தத்தில் கொரோனாவால் பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு கெங்கையம்மன் கோயில் தேர் ஊர்வலம்: நள்ளிரவு சிரசு விழா நடைபெற்றது

குடியாத்தம்: குடியாத்தத்தில் கொரோனாவால் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிைலயில் நேற்று கெங்கையம்மன் கோயில் தேர் ஊர்வலம் நடைபெற்றது. நள்ளிரவில் சிரசு ஊர்வலம் நடந்தது. குடியாத்தம் கோபாலபுரம் பகுதியில் கெங்கையம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் நடைபெறும் கெங்கையம்மன் சிரசு திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த விழாவில், ெவளி மாவட்ட, வெளி மாநிலங்களை சேர்ந்தவர்கள் என 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பர்.

இந்நிலையில், இந்தாண்டு கொரோனா நோய் தொற்று பரவல் தற்போது அதிகரித்து வருவதால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி பக்தர்களின்றி விழா நடத்த அரசு உத்தரவிட்டது. அதன்படி, வைகாசித் திருவிழாவையொட்டி பால் கம்பம் நடும் விழா, காப்பு கட்டும் விழாக்கள் கடந்த மாதத்தில் நடந்தது. இதையடுத்து கோயிலில் திருக்கல்யாணம் கடந்த 11ம் தேதி இரவு பக்தர்களின்றி கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றி நடைபெற்றது. தொடர்ந்து, நேற்று தேர்த்திருவிழா நடந்தது. இதையொட்டி கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது.

பின்னர் கோயில் திருத்தேர் மண்டபத்தில் இருந்து சிறிது தொலைவுக்கு இழுக்கப்பட்டது. இதையடுத்து தேர் சிறிது  நிமிடங்களில் நிலைக்கு சென்றது. இந்த விழாவில், சப்-கலெக்டர் ஷேக் மன்சூர், தாசில்தார் வத்சலா, டிஎஸ்பி தரன், டவுன் இன்ஸ்பெக்டர் சீனிவாசன், தாலுகா இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு, ஊர் நாட்டாண்மை ஆர்.ஜி.எஸ்.சம்பத், டவுன் வி.ஏ.ஓ. குமரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக தேர்த்திருவிழாவில் பக்தர்கள் பங்கேற்பதை தடுக்க கோயிலைச் சுற்றியுள்ள தெருக்கள், சாலைகளில் போலீசார் தடுப்புகளை அமைத்து கண்காணித்தனர்.

தொடர்ந்து, நள்ளிரவு 1 மணியளவில் சிரசு திருவிழா ஆகம விதிமுறைப்படி நடந்தது. இதையொட்டி கோயில் வளாகத்தில்  சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. பின்னர் கோயில் வளாகத்தை சுற்றி அம்மன் சிரசு கொண்டு வரப்பட்டது. இதையடுத்து அம்மன் சிரசு மண்டபத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அம்மன் உடலில் பொருத்தப்பட்டது. தொடர்ந்து, அம்மனுக்கு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் அம்மன் காட்சியளித்தார். விழாவில், பக்தர்கள் பங்கேற்பதை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். மேலும், பக்தர்கள் விழாவை பார்வையிடும் வகையில் சிரசு விழா நிகழ்வுகள் யுடியூப்பில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

இளைஞர்கள் விரட்டியடிப்பு

பல லட்சம் பக்தர்கள் திரளும் சிரசு திருவிழா கொரோனாவால் 2வது ஆண்டாக பக்தர்கள் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விழாவில் பங்கேற்க வேலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இளைஞர்கள் பலர் கோயிலுக்கு நேற்று வந்தனர். அவர்களை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தடுத்து நிறுத்தி விரட்டினர்.

Related Stories:

>