உயிரை பறித்த ‘டுடே டிரைவிங் செல்பி’ டிராக்டருடன் கிணற்றில் பாய்ந்து சென்னை கேட்டரிங் மாணவன் பலி

வாணியம்பாடி: திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த சின்ன மோட்டூர் பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் மகன் சஞ்சீவி (18), சென்னையில் தங்கியிருந்து தனியார் கேட்டரிங் சென்டரில் 2ம் ஆண்டு படித்து வந்தார். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக சொந்த ஊருக்கு வந்திருந்த நிலையில் நேற்று அதே கிராமத்தில் உள்ள ராஜேந்திரன் என்பவரது நிலத்தில் ஏர் உழுவதற்கு, சஞ்சீவியின் சித்தப்பா சவுந்தரராஜன் சென்றார். அப்போது சஞ்சீவியும் அவருடன் சென்றிருந்தார். உணவு அருந்துவதற்காக டிராக்டரை நிறுத்திவிட்டு சவுந்தரராஜன் சென்றபோது, டிராக்டரில் ஏறிய சஞ்சீவி தனது செல்போனில் செல்பி எடுத்து, ‘டுடே டிரைவிங்’ என வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் வைத்தார்.

தொடர்ந்து டிராக்டரை இயக்கியபோது டிராக்டர் அங்கிருந்த 60 அடி ஆழ விவசாய கிணற்றில் தலைக்குப்புற கவிழ்ந்தது. தகவலறிந்த வாணியம்பாடி தீயணைப்பு வீரர்கள் மற்றும் அம்பலூர் போலீசார், 4 மின் மோட்டார்களை கொண்டுவந்து கிணற்றில் இருந்த தண்ணீரை வெளியேற்றி 4 மணிநேரத்துக்கு போராட்டத்திற்கு பிறகு கிரேன் உதவியுடன் கிணற்றில் இருந்த டிராக்டரை மீட்டனர்.  டிராக்டர் அடியில் சிக்கி உயிரிழந்திருந்த சஞ்சீவியையும் சடலமாக மீட்டனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Related Stories:

>