சென்னை மக்களின் தாகம் தீர்க்கும் ஏரிகளில் ஒன்றானது: கோடையில் தண்ணீர் தேவையை சமாளிக்குமா புழல் ஏரி?

புழல்: சென்னை மக்களுக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒன்றானது புழல் ஏரி. இதன் மொத்த உயரம் 21.20 அடி. மொத்த கொள்ளளவு 3300 மில்லியன் கன அடி. இந்த ஏரி ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்டது. புழல் கண்ணப்ப சாமி நகர் முதல், செங்குன்றம் ஏரியின் மதகு, திருவள்ளூர் நெடுஞ்சாலை ஆலமரம் பகுதிவரை கரைகள் அமைக்கப்பட்டுள்ளது. மற்றொருபுறத்தில் சூரப்பட்டு பகுதியில் இருந்து சென்னை குடிநீர் வடிகால் வாரிய வரை காரைகள் உள்ளது. திருவள்ளூர் நெடுஞ்சாலை ஆலமரம் பகுதியில் இருந்து அன்னை இந்திரா நகர், பம்மதுகுளம், லட்சுமிபுரம், பழைய பம்மதுகுளம், சரத் கண்டிகை, எரான் குப்பம், பொத்தூர், திருமுல்லைவாயல்,

ஒரகடம், கள்ளிகுப்பம், பானு நகர், முருகா மேடு, சண்முகபுரம், மேட்டூர் வரை கரைகள் இல்லாததால் புழல் ஏரியை சுற்றியுள்ள பல்வேறு தரப்பினர் வாகனங்களை இலவச வாட்டர் சர்வீஸ் மையமாக பயன்படுத்தி வருகின்றனர். பொதுமக்களும், தங்களது துணிகளை துவைத்தும் வருகின்றனர். சிலர் காலை கடன் கழித்துவிட்டு அங்கேயே சுத்தம் செய்யும் நிலையும் உள்ளது. சுற்றுவட்டாரங்களில் சேரும் குப்பைகள் மற்றும் கழிவு பொருட்களையும் கரைகள் இல்லாத பகுதிகளிலும் கொட்டி வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட பொதுப்பணி துறையினருக்கு பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். அவர்கள் அவ்வப்போது வந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அதற்கு பிறகும் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் தொடர்ந்து குடிநீரை மாசுபடுத்தி வருகின்றனர். இதை தடுக்க கரைகள் இல்லாத பகுதிகளில் தற்காலிகமாக தடுப்புகளை அமைத்து எந்த வாகனமும் பொதுமக்களும் செல்லாதவாறு ஏற்பாடு செய்ய வேண்டும். அதே நேரத்தில் பொதுப்பணித்துறை ஊழியர்கள், சுழற்சி முறையில்  கரைகள் இல்லாத பகுதிகளில் ரோந்து பணியில் பணியாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி நடவடிக்கை எடுத்தால் ஏரியில் கொட்டப்படும் கழிவுகள் மற்றும் கழுவப்படும் வாகனங்கள் தடுக்கப்படும். செங்குன்றம் பொதுப்பணி அலுவலகம் அருகில் உள்ள  ஏரியின் கரை பகுதியில் நுழைவு கேட்டுகள் அமைத்து பொதுமக்கள் மற்றும் வாகனங்கள் செல்லாதவாறு ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

கரை பகுதிகளை மாதந்தோறும் ஆய்வு செய்து கரை பகுதியில் வளர்ந்துள்ள செடி கொடிகளை அகற்றி பாதுகாப்பான கரைகளை உறுதிப்படுத்த வேண்டும். மேலும் இந்த ஏரிநீரை நம்பி சென்னை மாநகர மக்கள் இருக்கின்றனர். இங்கிருந்துதான் தினமும் குடிநீர் அனுப்பப்படுகிறது. தினமும் 200 கன அடி நீர் சுத்திகரிப்பு செய்யப்பட்டு அனுப்பப்படுகிறது. ஏரியின் மொத்த கொள்ளளவு 3300 மில்லியன் கனஅடி. தற்போது 2,960 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. பூண்டி ஏரியில் இருந்து வினாடிக்கு 140 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. சென்னை குடிநீர் தேவைக்காக 122 கன அடி குடிநீர் அனுப்பப்பட்டு வருகிறது. தற்போது, கோடையில் தண்ணீர் தேவை அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றால் பலர், தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று விட்டனர். இங்கு வசிக்கும் மக்களுக்கு இந்த தண்ணீர் போதுமானதாக இருக்கும் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. சுமார் 4 மாத காலத்துக்கு தண்ணீர் போதுமானதாக இருக்கும் என்றும் தெரிகிறது. இதனால் கோடையில் தண்ணீர் பஞ்சம் இருக்காது என்று கூறப்படுகிறது. இதுகுறித்து பொதுப்பணித்துறை கூறுகையில், கரைகள் இல்லாத பகுதிகளில் பலர், ஏரியை ஆக்கிரமிப்பு செய்து குடியிருந்து வருகின்றனர். அதனால்தான் கரை இல்லாத பகுதிகளில் கரைகள் அமைக்கப்படும். இதுகுறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட வருவாய் துறையினரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய ஆட்சியில் வருவாய் துறையினர் உரிய ஆய்வு செய்து வீடுகளை அகற்றி, அவர்களுக்கு மாற்று இடம் வழங்கி, செய்தால் கரைகள் இல்லாத பகுதிகளில் கடைகள் கட்டுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். இதனால் ஏரியின் தண்ணீர் மாசு படாமல் இருக்கும். அதே நேரத்தில் ஏரிக்கரையில் சம்பந்தப்பட்ட புழல், செங்குன்றம், ஆவடி டேங்க் பேக்டரி, அம்பத்தூர், திருமுல்லைவாயல் ஆகிய காவல் நிலைய போலீசார் சுழற்சி முறையில் ரோந்து வந்தால் ஏரியில் குளிப்பது, துணி துவைப்பது மற்றும் வாகனங்களை கழுவுவது போன்றவை தடுத்து நிறுத்த முடியும். எங்கள் துறையை சேர்ந்த ஊழியர்கள் கேட்டால் மிரட்டப்படுகின்றனர்.

எனவே காவல்துறையினரும் இதில் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், ஏரியில் போதுமான தண்ணீர் இருப்பும் உள்ளது. இவைகள், கோடையை சமாளிக்க போதுமான இருக்கும். தினமும் சுமார் 150 கனஅடிக்கு மேல் சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக அனுப்பப்படுகிறது. அதனால் கோடையில் தண்ணீர் பஞ்சம் இருக்க வாய்ப்பு இல்லை. அதற்குள் பருவமழை பெய்தால் இன்னும் தண்ணீர் தட்டுப்பாடு வராது’ என்றனர்.

சுற்றுலா தலமாக்கப்படுமா?

பழமை வாய்ந்த புழல் ஏரியின் கரை சுமார் 4 கிமீ தூரம் கொண்டது. இந்த ஏரியின் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பலர், காலை, மாலை நேரங்களில் நடைபயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஏரி கரையின் மேல் பயனற்ற நிலையில் உள்ள மின் கம்பங்களை மாற்றி புதிய மின் கம்பங்களை அமைத்து விளக்குகளை எரிய வைக்க வேண்டும். நடைபயிற்சிக்கான இடத்தை புதுப்பிக்க வேண்டும். அப்படி அமைத்து இப்பகுதியை சுற்றுலாத்தலம் போன்று உருவாக்கினால் இன்னும் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். குழந்தைகளுக்கும் குதூகலமாக இருக்கும். தமிழக அரசு கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கைகொடுக்கும் சோழவரம் ஏரி

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒன்றானது சோழவரம் ஏரி. இந்த ஏரி  நிரம்பினால் உபரிநீர், கால்வாய் வழியாக புழல் ஏரிக்கு வந்து சேரும். இதேபோல் பம்மதுகுளம் ஏரி, பொத்தூர் ஏரி ஆகியவை மழைக்காலங்களில் நிரம்பினால் புழல் ஏரிக்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். கிருஷ்ணா நீர், பூண்டி ஏரியில் மூலம் வெள்ளானூர், திருமுல்லைவாயல் கால்வாய் மூலம் புழல் ஏரிக்கு தண்ணீர் வந்துவிடும்.

Related Stories: