27 வார்டுகளில் 17 கட்டுப்பாட்டு பகுதிகள் சின்னமனூரில் எகிறும் கொரோனா பாதிப்பு: மாவட்ட ஆட்சித்தலைவர் திடீர் ஆய்வு

சின்னமனூர்: சின்னமனூரில் உள்ள 27 வார்டுகளில் 17 இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இவைகளில், கலெக்டர் கிருஷ்ணன் உண்ணி ஆய்வு செய்தார். தமிழகத்தில் கொரோனா 2வது அலை பரவல் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை காய்கறி, இறைச்சி மற்றும் பலசரக்கு கடைகள் என திறக்க அனுமதி உள்ளதால், இக்கடைகளுக்கு வருவோர் முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் வருவதால் சின்னமனூர் பகுதியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

நகரில் உள்ள 27 வார்டுகளில் 17 இடங்கள் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதனால், காய்ச்சல், இருமல், தொண்டை வலி, உடல் வலி, சளி, சுவாசமின்மை உள்ளிட்ட அறிகுறி இருந்தால் உடனடியாக அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று பரிசோதனை செய்து கொள்ள, பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், தேனி மாவட்ட கலெக்டர் கிருஷ்ணன் உண்ணி சின்னமனூரில் கட்டுப்படுத்தப்பட்ட 17 இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது, கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் பொதுமக்களுக்கு அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

Related Stories: