திண்டுக்கல் மலை கிராமங்களில் சாகுபடி செய்யப்படும் மிளகு விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சுற்றுவட்டார மலை கிராமங்களில் சாகுபடி செய்யப்படும் மிளகு விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். ஒட்டன்சத்திரம் சுற்றுவட்டார மலை கிராமங்களாக மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள கே.சி பட்டி பன்றிமலை, ஆடலூர் மற்றும் குப்பம்மாபட்டி உள்ளிட்ட 25 மலை கிராமங்களில் மிளகு சாகுபடி நடைபெறுகிறது.

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் ஒரு கிலோ மிளகு 900 ரூபாய் முதல் 1800 ரூபாய்க்கு விற்பனையானது. கடந்த ஆண்டில் கிலோ 750 ரூபாய் முதல் 850 ரூபாய் வரை விற்பனையான மிளகு நடப்பு ஆண்டில் கிலோ 300 ரூபாய் முதல் 350 ரூபாய் வரை மட்டுமே விற்கப்படுகிறது. இதனால் மிளகு விவசாயம் நஷ்டத்தை எதிர்கொள்ளும் நிலை உருவாகி உள்ளதாகவும் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

தோட்டத்திற்கு மிளகு பறிக்க வரும் ஆட்களுக்கு கூலியே ஆண்களுக்கு 700 ரூபாயும், பெண்களுக்கு 350 ரூபாயாகவும் உள்ளது. மிளகு சாகுபடி செய்தால் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் நிலை இருப்பதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். எனவே இடைத்தரகர்களை நீக்கி அரசே மிளகை கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

10 மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் விருந்து உண்ணலாம் என்பது பழமொழி. அந்த அளவிற்கு மருத்துவ குணம் கொண்ட மிளகை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு கட்டுப்படியான விலை கிடைத்தால் மட்டுமே தொடர்ந்து உற்பத்தி அதிகரிக்கும். எனவே அரசு கவனமுடன் பரிசீலித்து மிளகுக்கு உரிய விலை கிடைக்க செய்ய வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

Related Stories: