டவ்-தே புயல் எதிரொலி: வடக்கு கடல் நீண்ட தூரத்திற்கு உள்வாங்கி காணப்பட்டது; 5 மாநிலங்களில் தேசிய பேரிடர் மீட்பு குழு தயார் நிலை

டெல்லி: தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நீடித்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது புயலாக உருமாறி லட்ச தீவு பகுதியில் நிலை கொண்டுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையின் படி நேற்று நள்ளிரவு புயலாக உருமாறிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 7 கி.மீ. வேகத்தில் நகர்ந்து தற்போது லட்ச தீவுகள் மற்றும் அதனை ஒட்டியா தென்கிழக்கு மற்றும் மத்திய அரபிக்கடலில் நிலைகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டவ்-தே  என பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுவடைந்து வடக்கு மற்றும் வடகிழக்கு பகுதியை நோக்கி செல்லும் என கணிக்கப்பட்டுள்ளது. கேரளமாநிலம் கண்ணுரில் இருந்து 290 கி.மீ. தொலைவிலும், குஜராத்தில் இருந்து தெற்கு மற்றும் தென்கிழக்கில் 1010கி.மீ. தொலைவிலும் தற்போது புயல் நிலை கொண்டுள்ளது. இது வரும் 18-ம் தேதி குஜராத் அருகே கரையை கடக்கலாம் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

டவ்-தே புயலின் தாக்கம் கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு, குஜராத் மற்றும் மராட்டியம் ஆகிய மாநிலங்களில் இருக்கும். இதனால் இந்த 5 மாநிலங்களிலும் தேசிய பேரிடர் மீட்பு குழு தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரபிக்கடல் பகுதியில்புயல் உருவாகி இருப்பதால், தமிழகம், கேரளா, கர்நாடகா, மஹாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கு, இந்திய வானிலை ஆய்வு மையம் புயல் எச்சரிக்கை விடுத்துள்ளது. இப்பகுதியில் மிக கன மழை பெய்யும். மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவிப்பு செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று காலையில் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் தீவில் தங்கச்சிமடம், பாம்பன் ஆகிய பகுதிகளில் சூறைக்காற்று வீசியது.  மேலும் வடக்கு கடல் நீண்ட தூரத்திற்கு உள்வாங்கி காணப்பட்டது.  இதனால் பாம்பன் வடக்கு கடற்கரையில் கடலுக்குச் செல்லாமல் நாட்டுப்படகு மீனவர்கள் நிறுத்தி வைத்திருந்த ஏராளமான நாட்டுப் படகுகள் தரைதட்டி நின்றன. தற்போது உருவாகியுள்ள புயலால் பாம்பன் தீவு மீனவர்கள் மத்தியில் அச்சம் ஏற்ப்பட்டுள்ளது.

Related Stories: