மருத்துவ வசதி, விழிப்புணர்வு இல்லாமல் கொத்து கொத்தாக மடியும் மக்கள் கிராமங்களை சூறையாடும் கொரோனா: நிலைமையை சமாளிக்க முடியாமல் திணறும் வடமாநில அரசுகள்

புதுடெல்லி: பெருநகரங்கள், சிறுநகரங்களைத் தொடர்ந்து கிராமங்களையும் சூறையாடத் தொடங்கி விட்டது கொரோனா வைரஸ். முறையான மருத்துவ வசதி, விழிப்புணர்வு இல்லாததால் பாதிப்பையே அறியாமல் மக்கள் கொத்து  கொத்தாக இறக்கின்றனர். அங்கு நிலைமையை சமாளிக்க முடியாமல் வடமாநில அரசுகள் திணறுகின்றன. கொரோனா முதல் அலையில் பெரும்பாலும் பெருநகரங்களே பாதிக்கப்பட்டன. மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் மட்டுமே கொரோனா வைரஸ் பரவியது.

ஆனால் 2வது அலை அப்படியில்லை. இம்முறை குக்கிராமங்களை கூட கொரோனா  விட்டு வைக்கவில்லை. பொதுஜனத்திடம் இருந்து விலகி மலை கிராமங்களில் வாழும் ஆதிவாசிகள், பழங்குடியினரையும் கொரோனா வேட்டையாடி வருகிறது. இந்த நிலை வடமாநிலங்களில் மிக மோசமடைந்துள்ளது. குறிப்பாக, பீகார், உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர், அரியானா, ஆந்திரா, ஒடிசா போன்ற மாநிலங்களில் கிராம மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். பீகார் தலைநகர்  பாட்னாவில் இருந்து 195 கிமீ தொலைவில் அமைந்துள்ள கைமர் மாவட்டம் பம்ஹார் காஸ் கிராமத்தில் கடந்த 25 நாளில் 34 பேர் இறந்துள்ளனர்.

 இது வழக்கத்துக்கு மாறான ஒன்று என்கின்றனர் அக்கிராம மக்கள். இறந்தவர்கள் அனைவரும்  கொரோனா அறிகுறிகளுடன் இருந்துள்ளனர். ஆனால் யாரும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளவில்லை.அப்பகுதியை சேர்ந்த அசோக் குமார் என்பவர் கூறுகையில், ‘‘எனது அத்தைக்கு காய்ச்சல் வந்தது, பின்னர் இருமல் ஏற்பட்டது அடுத்த ஒரு சில நாளில் இறந்து விட்டார். சமீப நாட்களில் இங்கு இதுபோன்ற மரணங்கள் நிறைய நடந்துள்ளது’’   என்கிறார். இந்த கிராமத்து மக்கள் கூறுகையில், ‘‘இங்கு சுமார் 70 சதவீதம் பேருக்கு கொரோனா அறிகுறி உள்ளது. பலரும் காய்ச்சலுடன் வீட்டு மருத்துவம் பார்த்துக் கொள்கின்றனர். மாநில அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை’’  என்கின்றனர்.

உத்தரப்பிரதேசத்தின் மாய்மா கிராமத்தில் கடந்த ஒரு மாதத்தில் 25 பேர் இறந்துள்ளனர். அதில் 4 பேர் மட்டுமே கொரோனாவில் இறந்ததாக கூறப்பட்டுள்ளது. ஆனால் அந்த கிராமத்தினர் கூறுகையில், ‘‘அரசு கூறும் கொரோனா இறப்பை விட  4 மடங்கு அதிக இறப்புகள் பதிவாகின்றன. இங்கு சுமார் 500க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா அறிகுறி உள்ளது. ஆனால் உள்ளூரில் முறையான பரிசோதனை மையங்கள் இல்லாததால் ஒன்றும் செய்ய முடியவில்லை’’ என்கின்றனர்.

ராஜஸ்தானில் சைஜன்பூர், பதோபூர், நெசுரா போன்ற கிராமங்களில் பாதிப்பு அதிகமாக உள்ளது. ஆனால் இங்கிருந்து கொரோனா பரிசோதனைக்காக மருத்துவமனையை நாட வேண்டுமென்றால் 10 கிமீ தாண்டி பக்கத்துக்கு ஊருக்கு போக  வேண்டாம். அதனாலேயே மக்கள் அறிகுறி இருந்தாலும் வீட்டிலேயே முடங்கி விடுகின்றனர். சட்டீஸ்கரில் பெரும்பாலும் மலை கிராமங்கள் அமைந்துள்ளன. இங்கு நக்சல் பாதிப்பும் அதிகளவில் உள்ளது. இதனால் மருத்துவ கட்டமைப்புகள் பெரிய அளவில் இல்லை. அதோடு கொரோனா சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நக்சலைட்கள் மக்களை  மிரட்டி வெளிநபர்கள் யாரும் கிராமத்திற்குள் வரக்கூடாது என பிரச்னையும் செய்கின்றனர். இதன் காரணமாக மருத்துவ குழு அங்கு செல்ல முடியாமல் மக்கள் பலர் இறக்கின்றனர்.

அரியானாவில் 50 கிராமங்கள் கொரோனா ஹாட்ஸ்பாட்டாக கண்டறியப்பட்டுள்ளன. ஆந்திராவிலும் பல கிராமங்கள் மருத்துவ வசதி கிடைக்காமல் தவிக்கின்றன.  அனைத்து மாநில அரசுகளும் கிராமங்களை கொரோனா கட்டுப்படுத்த சிறப்பு  குழுக்களை அமைத்துள்ளன. ஆனால் கிராமக்களிடம் விழிப்புணர்வு இல்லாததால் அரசுடன் ஒத்துழைக்க மறுப்பதாக குறை கூறுகின்றனர். இதுவும் மருத்துவ உதவிகள் கிராமங்களில் சென்றடைவதில் சிக்கலை ஏற்படுத்தி உள்ளன. கிராமங்களில்  பலர் கொரோனாவால் தான் இறந்தார்கள் என்ற பாதிப்பே தெரியாமல் இறக்கின்றனர் என்பதே கிராமங்களின் நிலையாக இருக்கிறது.

மருத்துவமனைக்கு செல்ல மறுக்கின்றனர்

உபியின் ஆக்ராவை ஒட்டிய எட்மட்பூர் கிராமத்தில் கடந்த 24 நாளில் 60 பேர் இறந்துள்ளனர். அங்கு 100க்கும் மேற்பட்டோர் கொரோனா அறிகுறிகளுடன் இருப்பதாக கிராமத்தினர் கூறுகின்றனர். கிராமத்தில் உள்ள கொரோனா தனிமை வார்டில்  எந்த அடிப்படை வசதியும் இல்லை என கூறும் கிராமமக்கள் அங்கு ஆக்சிஜன் உள்ளிட்ட தேவைகளை மாநில அரசு செய்து தரவில்லை என்கின்றனர். இதனால் கொரோனா தனிமை மையங்களுக்கு செல்ல பலர் மறுக்கின்றனர். மேலும், பலர்  மருத்துவமனைக்கு சென்றால் இறந்து விடுவோமோ என்ற அச்சத்திலும் மருத்துவமனைக்கு செல்வதை தவிர்ப்பதாக கூறுகின்றனர். கொரோனா அறிகுறி இருந்தாலும் அவற்றை மறைத்து பொது இடங்களுக்கு வந்து செல்வதாகவும்  கூறுகின்றனர்.

பிரதமர் மோடி எச்சரிக்கை

விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சியில் நேற்று பேசிய பிரதமர் மோடி, ‘‘கொரோனா குறித்து எச்சரிக்க விரும்புகிறேன். இந்த கொடிய வைரஸ் கிராமங்களில் வேகமாக பரவி வருகிறது. அனைத்து அரசுகளும் அதை தடுத்து நிறுத்த  முயற்சிகள் எடுத்து வருகின்றன. கிராமமக்களிடம் விழிப்புணர்வும், அவர்களின் ஒத்துழைப்பும் இருக்க வேண்டியது அவசியம். உங்களையும், உங்கள் குடும்பத்தையும் கொரோனாவிடமிருந்து பாதுகாத்துக் கொள்ள வழிகாட்டு நெறிமுறைகளை  பின்பற்ற வேண்டும்.

 காய்ச்சல் போன்ற அறிகுறி இருந்தால் பரிசோதனை செய்து கொள்ளுங்கள். தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள். சரியான நேரத்தில் மருந்து எடுத்துக் கொள்ளுங்கள். தடுப்பூசி போட்ட பிறகும் மாஸ்க் அணிதல், தனிமனித  இடைவெளி பின்பற்றுதல் போன்றவற்றை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்’’ என கூறி உள்ளார்.

இனம்புரியாத பயம்

கிராமமக்களை பொறுத்த வரை மருத்துவமனைக்கே செல்லத் தயங்குபவர்களாக உள்ளனர். இதனால், கொரோனா தொற்று இருந்தாலும் அதை மறைத்து சகஜமாக வாழ முயற்சிக்கின்றனர். நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்களால் மறைக்க  முடிவதில்லை. தடுப்பூசி போடுவதிலும் அவர்களிடம் இனம்புரியாத பயம் நிலவி வருகிறது. மருத்துவ கட்டமைப்புகள் பெரிய அளவில் இல்லாவிட்டாலும், உள்ளாட்சி நிர்வாகத்தின் மூலம் பரிசோதனை, சிகிச்சைகள் வழங்க அரசுகள் முயன்ற  அளவு முயற்சிக்கின்றன. ஆனால், கிராமங்களில் மக்களிடமிருந்து முறையான ஒத்துழைப்பு இல்லாமலேயே இருக்கிறது.

Related Stories: