மத்திய அரசுக்கு கேரள உயர்நீதிமன்றம் கேள்வி: போதுமான தடுப்பூசியை எப்போது வழங்குவீர்கள்?

திருவனந்தபுரம்: கொரோனாவால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ள கேரளாவுக்கு தேவையான தடுப்பூசியை எப்போது வழங்குவீர்கள் என்று மத்திய அரசுக்கு கேரள உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கேரளாவில் கொரோனா பரவல் மிக தீவிரமாகி வருகிறது. கடந்த இரு தினங்களுக்கு முன் நோயாளிகள் எண்ணிக்கை 43 ஆயிரத்தை நெருங்கியது. தினசரி மரண எண்ணிக்கையும் 100ஐ நெருங்கி வருகிறது. கேரளாவில் கொரோனா தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. தடுப்பூசி மையங்களில் ஏராளமானோர் நீண்ட நேரம் காத்திருந்தும் ஊசி போட முடியாமல் திரும்பிச் செல்கின்றனர்.

   இந்நிலையில் பாலக்காடு அருகே உள்ள ஒற்றப்பாலம் பகுதியை சேர்ந்த பிரபாகரன் என்பவர் கேரளாவில் அனைவருக்கும் உடனடியாக கொரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கக் கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல்  செய்தார். இந்த மனு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது, இதுகுறித்து விளக்கம் அளிக்க மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. இந்நிலையில் நேற்று இந்த மனு மீது மீண்டும் விசாரணை நடைபெற்றது.

அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தடுப்பூசி வினியோகம் தற்போது மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இல்லை என்றும், உச்சநீதிமன்றம்  நியமித்துள்ள உயர்மட்டக்குழு தான் இது தொடர்பாக முடிவெடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

அப்போது நீதிபதி கூறுகையில், கேரளாவில் நாளுக்கு நாள் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கேரளாவில் தற்போது இருக்கும் சூழ்நிலையை மத்திய அரசு புரிந்து கொள்ள வேண்டும்.  கேரளாவுக்கு தேவையான தடுப்பூசியை எப்போது வழங்க முடியும் என்பதை ஒரு வாரத்திற்குள் தெரிவிக்க வேண்டும் என்று கூறினார். பின்னர் இந்த வழக்கு வரும் 21ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Related Stories: