ஐசியு வார்டிலும் தைரியத்துடன் பாட்டு பாடி மகிழ்ந்த இளம் பெண் சிகிச்சை பலனின்றி பரிதாப பலி

புதுடெல்லி: கடந்த வாரம் முகத்தில் ஆக்சிஜன் மாஸ்குடன் லவ் யூ ஜிந்தகி இந்தி பாடலுக்கு அசைந்தாடி உற்சாகமாக இருந்த இளம்பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட 30 வயது இளம்பெண் ஒருவர் டெல்லியில் கொரோனா அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.  மருத்துவமனையில் சேர்ந்த 10 நாட்களுக்குப் பிறகே இவருக்கு ஐசியு வார்டில் இடம் கிடைத்தது. உடல் நிலையில் கடும் பாதிப்பு இருப்பதால் கடவுளை வேண்டிக் கொள்ளுமாறு டாக்டர் கூறிய போது கூட அந்த இளம்பெண் சற்றும் மனம் தளராமல் முகத்தில் ஆக்சிஜன் மாஸ்குடன், டியர் ஜிந்தகி திரைப்படத்தில் வரும் லவ் யூ ஜிந்தகி  பாடலுக்கு அசைந்தாடியபடி உற்சாகமாக இருந்தார்.

இதை வீடியோ எடுத்த  டாக்டர் மோனிகா லாங்கே  சமூக வலைதளத்தில் பதிவிட்டார். இந்த வீடியோ அந்த பெண்ணின் மனவலிமையை காட்டுவதோடு, மற்றவருக்கு தன்னம்பிக்கையை அளிக்கும் எனவும் டாக்டர் மோனிகா குறிப்பிட்டு  இருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அந்த இளம்பெண் நேற்று முன்தினம் உயிரிழந்துவிட்டதாக டாக்டர் மோனிகா தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். ‘துணிச்சலான தைரியமிக்க ஆத்மாவை நாம் இழந்துவிட்டோம். நான் மிகவும்  வருந்துகிறேன். அவரது இழப்பை அந்த குடும்பம் தாங்கிக்கொள்வதற்கு தயவு செய்து பிரார்த்தனை செய்யுங்கள்’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: