ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஸ்புட்னிக் தடுப்பூசி விலை ரூ.995: அடுத்த வாரம் விற்பனைக்கு வரும்

ஐதராபாத்: ரஷ்யா தயாரித்துள்ள ஸ்புட்னிக் வி தடுப்பூசியை டாக்டர் ரெட்டீஸ் நிறுவனம் இந்தியாவில் நேற்று அறிமுகம் செய்தது. இதன் ஒரு டோஸ் விலை ரூ.995.40 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரசுக்கு எதிராக கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய இரு தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. மூன்றாவதாக டாக்டர் ரெட்டீஸ் நிறுவனத்துக்கு ரஷ்யாவிலிருந்து ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை இறக்குமதி செய்யவும்,  தயாரிக்கவும் மத்திய அரசு அனுமதி அளித்தது. இதன்படி, கடந்த 1ம் தேதி ரஷ்யாவிலிருந்து முதல்கட்ட தடுப்பூசிகள் இந்தியாவில் இறக்குமதியானது.

இந்நிலையில், ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை மக்களுக்கு செலுத்தும் பணியை ரெட்டீஸ் நிறுவனம் நேற்று தொடங்கியது. முதல் பயனாளிக்கு ஸ்புட்னிக் வி தடுப்பூசி செலுத்தப்பட்டது. அத்துடன் தடுப்பூசிக்கான விலையையும் ரெட்டீஸ் நிறுவனம்  அறிவித்துள்ளது. ஒரு டோஸ் மருந்து ரூ.995.40 (ரூ.948+5 சதவீதம் ஜிஎஸ்டி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட தடுப்பூசியின் விலை என்றும், இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டதும் அதன் விலை குறைய வாய்ப்பிருப்பதாகவும் ரெட்டீஸ் நிறுவனம் கூறி உள்ளது.

ஸ்புட்னிக்-வி தடுப்பூசியானது 91.6 சதவீதம்  செயல்திறன் கொண்டது என பரிசோதனை நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி அடுத்த வாரம் சந்தைக்கு வர வாய்ப்பு உள்ளது என மத்திய அரசு கூறி உள்ளது. ஸ்புட்னிக் வி இரண்டு டோஸ் கொண்ட  தடுப்பூசியாகும். இதே நிறுவனம் ஸ்புட்னிக் லைட் என்ற ஒற்றை டோஸ்  தடுப்பூசியை தயாரித்துள்ளது. இதற்கு ரஷ்யா அனுமதி அளித்துள்ள நிலையில்,  இந்தியாவின் முதல் ஒற்றை டோஸ்  தடுப்பூசியாக ஸ்புட்னிக் லைட்  அறிமுகம் ஆகலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தொடர்பாக மத்திய  அரசுடன் ரெட்டீஸ் நிறுவனம் ஜூன் மாதம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.

பரவலாக்கப்படவேண்டும்

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நேற்று தனது டிவிட்டர் பதிவில், “மத்திய அரசின் தடுப்பூசி கொள்கை தான் சிக்கலை அதிகப்படுத்துகின்றது. தடுப்பூசி கொள்முதல் மையப்படுத்தப்பட வேண்டும். தடுப்பூசி விநியோகம் பரவலாக்கப்பட  வேண்டும். இந்தியாவால் இதனை நடைமுறைப்படுத்த முடியாது’’ என குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையே, நாளை முதல் வரும் 31ம் தேதிக்குள் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச  அரசுக்கு 1.92 கோடி டோஸ் தடுப்பூசி  விநியோகிக்கப்பட இருப்பதாக மத்திய  சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் 1.62 கோடி கோவிஷீல்டு  தடுப்பூசியும், 29.49 லட்சம் கோவாக்சின் தடுப்பூசியும் வழங்கப்படும்.  மொத்தம் 118 நாளில் நேற்று காலை 7 மணி நிலவரப்படி  நாடு முழுவதும் 17.93  கோடி பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்.

Related Stories: