கோவா அரசு மருத்துவமனையில் தொடரும் அவலம்: ஆக்சிஜன் இன்றி 4 நாளில் 75 பேர் பலி: நாடு முழுவதும் கொரோனாவுக்கு ஒரே நாளில் 4,000 பேர் மரணம்

பனாஜி: கோவா அரசு மருத்துவமனையில் தொடர்ந்து 4வது நாளாக ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் 75 கொரோனா நோயாளிகள் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.கோவா மாநிலம் பனாஜியில் உள்ள கோவா அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் கொரோனா நோயாளிகள் உயிருக்கு போராடி வருகின்றனர். கடந்த 11ம் தேதி அதிகாலை 2 மணி முதல் 6 மணிக்குள் 26 நோயாளிகள் ஆக்சிஜன்  தட்டுப்பாட்டால் உயிரிழந்தனர். ஆனால், கோவா முதல்வர் பிரமோத் சாவத் ஆக்சிஜன் போதுமான அளவு இருப்பதாவும், அதனை மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்க்கும் சப்ளையில் சிக்கல்கள் இருப்பதாகவும் தெரிவித்தார்.

ஆனால் அடுத்த நாள் அதிகாலையில் 21 பேரும், நேற்று முன்தினம் 15 பேரும் பலியான நிலையில் நேற்று அதிகாலை 13 பேர் இறந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே கோவா மாநில உயர் நீதிமன்றம்  விசாரணை நடத்தி வருகிறது. நேற்று விசாரணையிலும் மாநில அரசு அளித்த பதிலில், ஆக்சிஜன் சிலிண்டரை கொண்டு வருவதில் சில இடையூறுகள் இருப்பதாகவும் அதனை சரி செய்யும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறி உள்ளது. அடுத்தடுத்து 4 நாட்களில் 75 பேர் ஆக்சிஜன் இல்லாமல் இறப்பதை மாநில அரசு வேடிக்கை பார்ப்பது அதிர்ச்சி அளிக்கிறது.  

இதற்கிடையே, நாடு முழுவதும் நேற்றும் கொரோனா பலி தொடர்ந்து 3வது நாளாக 4 ஆயிரத்துக்கும் அதிகமாகவே பதிவானது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 4,000  பேர் பலியான நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 2  லட்சத்து 62 ஆயிரத்து 317 ஆக அதிகரித்துள்ளது. தினசரி பாதிப்பு 3 லட்சத்து 43 ஆயிரத்து 144 ஆக பதிவாகி உள்ளது. மொத்த பாதிப்பு 2 கோடியே 40 லட்சத்து 46 ஆயிரத்து 809 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 37  லட்சத்து 4 ஆயிரத்து 893 ஆக உள்ளது.  குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 2 கோடியே 79 ஆயிரத்து 599 ஆக உள்ளது.

மகாராஷ்டிராவில் கறுப்பு பூஞ்சையால் 52 பேர் பலி

கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களை தாக்கும் கறுப்பு பூஞ்சை எனப்படும் மியூகோர்மைகோசிஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரை இந்த பாதிப்புக்கு மகாராஷ்டிராவில் 52 பேர் இறந்திருப்பதாக முதல் முறையாக  கணக்கெடுப்பு தயார் செய்யப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் மட்டும் 1500 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதே போல் மத்தியபிரதேசத்தில் கடந்த 2 நாளில் 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: