சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்தா?: உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

புதுடெல்லி: சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டுமென உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கொரோனா பரவலால் பள்ளிகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ள நிலையில் பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், மே 4ம் தேதி முதல் ஜூன் 14ம் வரை நடக்க  இருந்த 12ம் வகுப்பு தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டன. இந்நிலையில், கொரோனா சூழலை கருத்தில் கொண்டு 12ம் வகுப்பு தேர்வை ரத்து செய்ய வேண்டுமென பெற்றோரும், மாணவர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், ‘தற்போதைய சூழலில் பொதுத் தேர்வு நடத்துவது சாத்தியமற்றது. ஆனால் அதை ரத்து செய்வது தொடர்பாக அறிவிக்க தாமதப்படுத்துவதால் வெளிநாட்டில் பல்கலையில் மாணவர்கள் சேர முடியாமல் சிரமப்படுகின்றனர்’ என  கூறப்பட்டுள்ளது.

இது குறித்து சிஎஸ்பி தரப்பில், ‘‘12ம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. தேர்வு நடத்துவதாக இருந்தால் 15 நாட்கள் முன்பாக அறிவிக்கப்படும்’’ என்றார். அதே சமயம், மத்திய கல்வி அமைச்சக அதிகாரிகள் கூறுகையில்,  ‘‘ஜூன் 1ம் தேதி மறுஆய்வு கூட்டம் நடத்தப்படும். அதில் தேர்வு நடத்துவது குறித்து முடிவு செய்யப்படும்’’ என்றார்.

Related Stories: