×

நர்ஸ் மீது ஆசிட் வீச்சு: இருவருக்கு 10 ஆண்டு சிறை உறுதி: சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை:  நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டை அடுத்த எலச்சிபாளையம்  ஆரம்ப சுகாதார நிலையத்தில், அப்பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் தனது மனைவியை, பிரசவத்திற்காக சேர்த்தார். அங்கு நர்சாக பணியில்  இருந்த விஜயகுமாரி, அப்பெண்ணை திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அங்கு குழந்தை உயிரிழந்தது.

 இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன், தனது குடும்பத்தினருடன் ஆரம்ப சுகாதார நிலையம் வந்து   தகராறில் ஈடுபட்டார். இரு மாதங்களுக்குப் பின், எழும்புலி எனும் கிராமத்திற்கு ஆய்வுக்கு சென்ற நர்ஸ் விஜயகுமாரி, தனக்கு தெரிந்த  நண்பருடன் இரு சக்கர வாகனத்தில் ஊர் திரும்பிய போது மற்றொரு இரு சக்கர வாகனத்தில் துரத்தி வந்த மணிகண்டன் மற்றும் விஜயகுமார் ஆகியோர் விஜயகுமாரி மீது ஆசிட் வீசினர். இதில் விஜயகுமாரி பலத்த காயமடைந்தார்.

 இதுதொடர்பாக, வேலகவுண்டம்பட்டி காவல் நிலையத்தில் மணிகண்டன் மற்றும் விஜயகுமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நாமக்கல் மகளிர் சிறப்பு நீதிமன்றம், இருவருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறை  தண்டனை விதித்து 2020ல் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை ரத்து செய்யக் கோரி மணிகண்டனும், விஜயகுமாரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வேல்முருகன், இருவருக்கும் விதிக்கப்பட்ட 10 ஆண்டுகள் சிறை தண்டனையை  உறுதி செய்து தீர்ப்பளித்தார்.



Tags : Chennai High Court , Acid attack on nurse: Two sentenced to 10 years in jail: Chennai High Court verdict
× RELATED நீதித்துறையின் நெறிமுறைகளை மாவட்ட...