மூடி கிடக்கும் ஆலைகளை இயக்கி தமிழகத்தில் ஆக்சிஜன் உற்பத்தி அதிகரிக்கப்படும்: தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்

நெல்லை: நெல்லை மாவட்டம், கங்கைகொண்டான் சிப்காட் அருகே மருத்துவ ஆக்சிஜன் தயாரிப்பு ஆலை உள்ளது. கடந்த 2013ம் ஆண்டு மூடப்பட்ட இந்த ஆலையில் தற்போது திரவ ஆக்சிஜன் டேங்கர்களில் கொண்டு வந்து நிரப்பிக்  கொடுக்கும் பணிகள் மட்டும் நடந்து வருகிறது. இதுகுறித்து தகவலறிந்து, நெல்லை வந்த தமிழக தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ஆலையில் நேற்று செய்தார். பின்னர், அமைச்சர் தங்கம் தென்னரசு நிருபர்களிடம் கூறியதாவது: கங்கைகொண்டானில் அமைந்துள்ள ஆக்சிஜன் உற்பத்தி ஆலை, கடந்த 2013ம் ஆண்டு முதல் இயங்கவில்லை.

தற்போது ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் இந்த ஆலையை உடனடியாக இயக்கத்திற்கு கொண்டு வர  உத்தரவிடப்பட்டுள்ளது. அதற்கு தொழில்நுட்ப ரீதியான அனைத்து உதவிகளையும் தொழில் துறை, மாவட்ட நிர்வாகம் மூலம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த ஆலையில் நாள் ஒன்றுக்கு 2.5 கிலோ லிட்டர் ஆக்சிஜன் தயாரிக்க  முடியும். தமிழகத்தில் இயங்காமல் இருக்கும் அனைத்து ஆலைகளையும் இயக்கி ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு தென்னரசு தெரிவித்தார்.

இதனிடையே, இந்த ஆலைக்கு டேங்கர்களில் எடுத்து வரப்பட்டு 25 சிலிண்டர்களில் நிரப்பப்பட்ட ஆக்சிஜனை நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு அனுப்பி வைத்தார். விருதுநகரில்ஆக்சிஜன் ஆலை: தமிழக அரசின் வேண்டுகோளுக்கிணங்க ராம்கோ சிமெண்ட் நிறுவனம், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தனது சிமெண்ட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்கும் இயந்திரத்தை ரூ.52 லட்சம் செலவில் நிறுவியுள்ளது.  இதை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைதுறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் ேநற்று துவக்கி வைத்தனர். இந்தஆலையில் உற்பத்தியாகும் திரவ ஆக்சிஜன் 48 சிலிண்டர்களில்  நிரம்பி விருதுநகர் மாவட்ட மருத்துவமனைகளுக்கு சப்ளை  செய்யப்படும்.

ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தி திடீர் நிறுத்தம்

கொரோனா பெருந்தொற்றால் ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்கும் வகையில், ஸ்டெர்லைட் ஆலையில் கடந்த 12ம் தேதி இரவு ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கியது. முதல் கட்டமாக உற்பத்தி செய்யப்பட்ட 4.8 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன்  நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. ஓரிரு நாட்களில் 35 மெட்ரிக் டன் உற்பத்தி செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.  இந்நிலையில் நேற்று அதிகாலையில் திடீரென ஆக்சிஜன் உற்பத்தி இயந்திரம்  பழுதானது. இதனால் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இந்த பழுது ஓரிரு நாளில் சரியாகி ஆக்சிஜன் உற்பத்தியாகும் என்று ஆலை நிர்வாகம் தெரிவித்தது.

Related Stories: