கொரோனாவால் பாதித்தவர்கள், ஆதரவற்றோரின் வீடுகளை தேடிச்சென்று 3 வேளை இலவச உணவு: ஓராண்டாக தொடரும் தேனி இளைஞர் சேவை

தேனி: கொரோனாவால் பாதிக்கப்பட்டு, வீடுகளில் தனிமையில் இருப்பவர்களுக்கு தேனியைச் சேர்ந்த இளைஞர், வீடுகளுக்கு சென்று உணவளிப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி அருகே பழனிசெட்டிபட்டியைச் சேர்ந்தவர் மகேஷ்ராஜ் (36). இவர், தேனி எடமால் தெருவில் செல்போன் சர்வீஸ், விற்பனை நிலையம் நடத்தி வருகிறார். கொரோனாவால் பாதிக்கப்பட்டு, வீட்டில் தனிமையில் இருந்து பணம் இல்லாமல்  தவிப்பவர்களுக்கும், சாலையோரம் வசிப்பவர்களுக்கும் மகேஷ்ராஜ்  கடந்த ஓராண்டாக உணவு வழங்கி வருகிறார்.

காலை, இரவு இட்லி, தோசை, சப்பாத்தி மற்றும் மதியம் காயுடன் கூடிய தக்காளி சாதம், லெமன் சாதம் என சுழற்சி முறையில் தினசரி 200 நபர்களுக்கு உணவளித்து வருகிறார். குடும்பத்தினர் தயாரித்த உணவு பொட்டலங்களை  எடுத்துக்கொண்டு டூவீலரில் 20 கி.மீ. வரை சுற்றி வருகிறார். அப்போது சாலையோரத்தில் உணவின்றி தவிப்பவர்களுக்கு் உணவு வழங்கிச் செல்கிறார். தொலைபேசியில் அழைப்பவர்களுக்கும் அவர்களது வீட்டிற்கே சென்று உணவளித்து  வருகிறார்.

இதுகுறித்து மகேஷ்ராஜ் கூறுகையில், ‘‘‘‘குடும்பச்சூழலால் சிறு வயதிலேயே உணவின் தேவையை நன்கு உணர்ந்தேன். பேரிடர் காலங்களில் கேரளாவுக்குச் சென்று உதவினேன். கடந்தாண்டு கொரோனா பாதிப்பின்போது, சாலை ஓரத்தில்  உணவில்லாமல் தவிப்பவர்களுக்கு உணவு அளித்தேன். தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு, வீடுகளில் தனிமைப்பட்டு உணவின்றி தவிப்பவர்களுக்கு, உணவு அளித்து வருகிறேன். இதற்காக எனது செல்போன் எண்ணை சமூக  வலைத்தளத்தில் பதிவிட்டு உள்ளேன்’’ என்றார்.

Related Stories: