×

கோவில்பட்டியில் அதிக விலைக்கு விற்பதற்காக ரெம்டெசிவிர் பதுக்கிய மருந்து கடை உரிமையாளர் உள்பட 2 பேர் கைது: 42 குப்பிகள் பறிமுதல்

கோவில்பட்டி: கோவில்பட்டியில் அதிக விலைக்கு விற்பதற்காக பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 42 ரெம்டெசிவிர் மருந்து குப்பிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக மருந்து கடை உரிமையாளர் உள்பட 2 பேர் கைது  செய்யப்பட்டனர்.
தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்குநாள் அதிகரித்து வருவதையடுத்து மருத்துவமனைகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரெம்டெசிவிர் மருந்து டாக்டர்களால் பரிந்துரை செய்யப்பட்டு  நோயாளிகளுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.

கடந்த சில நாட்களாக ரெம்டெசிவிர் மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து இதனை கள்ளச்சந்தையில் சிலர் விற்பனை செய்து வருவதாக புகார்கள் எழுந்தன. அப்படி, கள்ளச்சந்தையில் விற்பனை செய்பவர்களை போலீசார் கைது செய்து  வருகின்றனர்.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கதிரேசன் கோயில் சாலை மேட்டுகாளியம்மன் கோயில் தெரு பகுதியில் தனியார் காம்ப்ளக்சில் செயல்பட்டு வரும் மொத்த மருந்து விற்பனை கடை ஒன்றில் ரெம்டெசிவிர் பதுக்கி  வைக்கப்பட்டு அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக சுகாதாரத்துறை மற்றும் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கோவில்பட்டி சுகாதார பணிகள் துணை இயக்குநர் அனிதா தலைமையிலான குழுவினர்  சம்பந்தப்பட்ட கடையில் சோதனை நடத்தினர்.

அப்போது, 42 ரெம்டெசிவிர் மருந்து குப்பிகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கடை உரிமையாளர் சண்முகம், அவரது சகோதரர் கணேசன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அங்கிருந்த  42 ரெம்டெசிவிர் குப்பிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

கைது செய்யப்பட்ட இருவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் நெல்லை, மதுரையில் இருந்து ரூ.16 ஆயிரத்திற்கு ரெம்டெசிவிர் மருந்து வாங்கி வந்து கோவில்பட்டியில் ரூ.30 ஆயிரம் வரை விற்பனை செய்தது தெரிய வந்தது. மதுரை  மற்றும் நெல்லையில் யார், யாரிடம் ரெம்டெசிவிர் மருந்து வாங்கினார்கள், இதன் பின்னணியில் இருக்கும் கும்பல் குறித்து போலீசார் இருவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Remdecivir ,Kovilpatti , Two persons, including the owner of a drug store in Remdecivir, were arrested and 42 bottles confiscated for selling at Kovilpatti.
× RELATED கோவில்பட்டியில் 16 ஆண்டுகள் தலைமறைவாக இருந்து வருபவருக்கு வலை