தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரம்: துப்பாக்கி சூடு தொடர்பான இடைக்கால அறிக்கை முதல்வரிடம் சமர்ப்பிப்பு

சென்னை: தூத்துக்குடியில் வேதாந்தா நிறுவனத்துக்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலை இயங்கி வந்தது. இந்த ஆலை செயல்பட தொடங்கியதில் இருந்து வெளியேறும் நச்சு வாயுவால் ஆலை இருக்கும் பகுதி மற்றும் சுற்றுவட்டார  கிராம மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. அந்த பகுதியின் நிலத்தடி நீரும், காற்றும் பாதிக்கப்பட்டதாக பொதுமக்கள் கருத்து தெரிவித்ததுடன், ஆலையை மூட வேண்டும் என்று பல ஆண்டுகளாக தூத்துக்குடி பகுதி  மக்கள் மத்திய, மாநில அரசுக்கு கோரிக்கை வைத்தனர். தொடர் போராட்டம் நடத்தி வந்தனர்.

இந்நிலையில், கடந்த 2018ம் ஆண்டு மே மாதம் 22ம் தேதி தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் நோக்கி அப்பகுதி மக்கள் பேரணியாக சென்றனர். அப்போது போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தியதால் பதற்றம் உருவானது. போராட்டத்தில்  ஈடுபட்டவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.  இது தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளது. போலீஸ் துப்பாக்கி சூடு நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த, உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில்  ஒருநபர் ஆணையத்தை கடந்த அதிமுக அரசு நியமித்து உத்தரவிட்டது. ஆணையத்தின் தலைவர் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தார்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், பாதிக்கப்பட்டவர்கள், அரசு துறையை சார்ந்தவர்கள், போலீசார்,  பத்திரிகையாளர்கள், பொதுமக்கள் என பலரிடம் ஆணையம் விசாரணை நடத்தியது. இதுபற்றி கருத்து தெரிவித்த முக்கிய பிரமுகர்களுக்கும் சம்மன் அனுப்பியும் விசாரணை நடத்தப்பட்டது.இந்நிலையில் விசாரணை ஆணையத்தின் தலைவர்  ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் சென்னை, தலைமை செயலகத்தில் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து இடைக்கால அறிக்கையை சமர்ப்பித்தார். அப்போது தமிழக அரசின் தலைமை செயலாளர் இறையன்பு உடனிருந்தார்.

Related Stories: