வீட்டு தனிமையில் இருப்பவர்களை தொலைபேசியில் கண்காணிக்க மருத்துவ மாணவர்கள் நியமனம்: மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தகவல்

சென்னை: வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்களுக்கு தொலைபேசி மூலமாக மருத்துவ ஆலோசனை வழங்க 300 பயிற்சி மருத்துவர்களுக்கான பயிற்சி கூட்டம் ஆணையர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் நேற்று நடைபெற்றது.   பின்னர் ககன்தீப் சிங் பேடி நிருபர்களிடம் கூறியதாவது: ஒவ்வொரு மண்டலத்திலும் மருத்துவ மாணவர்களை நியமனம் செய்து வீட்டு தனிமையில் இருக்கும் கொரோனா நோயாளிகளை தொடர்பு கொண்டு அவர்களின் நிலையை தெரிந்து கொள்ள வேண்டும். இதற்காக மாநகராட்சி சார்பாக 300  இறுதியாண்டு மருத்துவ மாணவர்களை தற்காலிகமாக மாநகராட்சி மண்டலங்களில் நியமனம் செய்வதாக முடிவு எடுத்திருந்தோம்.

 அதன்படி 135க்கு மேற்பட்ட மருத்துவ மாணவர்கள் வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு பயிற்சி கொடுக்கப்பட்டு வருகிறது. இன்று முதல் ஒவ்வொரு மண்டலத்திலும் உள்ள கட்டுப்பாட்டு அறையில் சுழற்சி முறையில் 10 மருத்துவர்கள்  இருப்பார்கள். அதேபோல் மருத்துவர் அல்லாத தன்னார்வலர்கள் இருப்பார்கள். இவர்களின் வேலை என்பது வீட்டு தனிமையில் இருக்கும் கொரோனா நோயாளிகளை தொடர்பு கொண்டு மருந்து சரியாக சாப்பிடுகிறார்களா, காய்ச்சல் இருக்கிறதா,  ஆக்சிஜன் லெவல் எப்படி இருக்கிறது, என்ன மாதிரியான மருந்துகளை எப்படி சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் தொடர்பு கொண்டு ஆலோசனை வழங்குவார்கள்.

 அவர்களின் நிலை தெரிந்த பிறகு முகாம்களுக்கு வரவழைக்க வேண்டிய  நிலை இருந்தால் அல்லது மருத்துவனைகளுக்கு அனுப்பவேண்டிய சூழல் இருந்தால், மருத்துவ மாணவர்கள், மாநகராட்சி அதிகாரிகள், மருத்துவ அதிகாரிகளை தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதற்கான உரிமையை அவர்களுக்கு  கொடுத்து இருக்கிறோம்.வீட்டு தனிமையில் இருப்பவர்களின் நலன் காக்க, மருத்துவ மாணவர்களுக்கு மாதம் ரூ.45 ஆயிரம் வழங்கி மூன்று மாதங்களுக்கு நியமித்திருக்கிறோம்.

30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வீட்டு தனிமையில் இருக்கிறார்கள். 60 வயதிற்கு கீழ் உள்ள நோயாளிகளின் வீடுகளுக்கு சென்று அவர்களின் நிலை பற்றி தெரிந்து கொண்டு அவர்கள் வீட்டு தனிமையில் இருக்க வேண்டுமா, அல்லது  மருத்துவமனையில் இருக்க வேண்டுமா என்று சொல்லுகிறோம்.ஒரே வீட்டுக்குள் வசிக்ககூடிய குடும்பத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் மற்றவருக்கு அறிகுறிகள் இல்லை என்றாலும் கொரோனா முகாமுக்கு போக வேண்டும் என்றால் சல்லலாம்.

காரணம் கொரோனா முகாமில் 3,748  படுக்கைகள் காலியாக இருக்கிறது. அவர்களுக்கு உணவு, மருத்துவ வசதி, மருத்துவர்கள் வசதி அனைத்தும் இருக்கும். ஒரே வீட்டுக்குள் வசிக்கக் கூடியவர்களுக்கு கொரோனா வந்தால் முகாமுக்கு செல்வது நல்லது. சென்னையில் இருக்கக் கூடிய 21 கொரோனா முகாம்களில் 6,700 மேல் படுக்கைகள் இருந்தும், ஆக்சிஜன் இல்லாத 3,700க்கு மேற்பட்ட படுக்கைகள் காலியாக இருக்கிறது. தேவைப்பட்டால் 10 ஆயிரம் படுக்கைகளை ஏற்பாடு செய்ய கூட  தாயாராக இருக்கிறோம்.

Related Stories:

>