கொரோனா நோயாளிகளை அழைத்து செல்ல தனியார் ஆம்புலன்சுக்கு கட்டணம் நிர்ணயம்: தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பு

சென்னை: கொரோனா நோயாளிகளை அழைத்துச் செல்ல தனியார் ஆம்புலன்சுக்கு கட்டணம் நிர்ணயம் செய்து தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனாலும் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. அதேபோன்று, உயிரிழப்புகளும் அதிகம் ஏற்படுகிறது. மேலும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் 108 ஆம்புலன்சை தொடர்பு கொண்டால் அவர்கள் உடனடியாக வந்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்வார்கள்.

ஆனால், தற்போது தொற்றின் பாதிப்பு அதிகமாக இருப்பதால் 108 ஆம்புலன்ஸ்க்கு காத்திருக்காமல் தனியார் ஆம்புலன்ஸ்களில் மருத்துவமனைக்கு செல்கின்றனர். இதை ஒரு சில தனியார் ஆம்புலன்ஸ்கள் தங்களுக்கு சாதமாக பயன்படுத்தி வழக்கத்திற்கு மாறாக மூன்று மடங்கு வரை கட்டணம் வசூல் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதுபோல, இறந்தவர்களின் உடலை கொண்டு செல்வதற்கு அதிக கட்டணம் வசூல் செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து தமிழக சுகாதாரத்துறை தனியார் ஆம்புலன்ஸ்கள் கட்டண விவரங்களை அறிவித்துள்ளது.

இதுகுறித்து, தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கொரோனா நோயாளிகளை அழைத்துச் செல்ல சாதாரண ஆம்புலன்ஸ்களுக்கு முதல் 10 கிலோ மீட்டருக்கு ரூ.1,500 கட்டணம், சாதாரண ஆம்புலன்ஸ்களில் 10 கிலோ மீட்டருக்கு பிறகு கிலோ மீட்டருக்கு ரூ.25 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அடிப்படை உயிர் காக்கும் வசதிகளுடன் கூடிய ஆம்புலன்ஸ்களுக்கு முதல் 10 கிலோ மீட்டருக்கு ரூ.2000, அடிப்படை உயிர் காக்கும் வசதிகளுடன் கூடிய ஆம்புலன்ஸ்களில் 10 கிலோ மீட்டருக்கு பிறகு கிலோ மீட்டருக்கு ரூ.50 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் வென்டிலேட்டர் வசதியுடன் கூடிய ஆம்புலன்ஸ்களுக்கு முதல் 10 கிலோ மீட்டருக்கு ரூ.4.000 ஆகவும், 10 கிலோ மீட்டருக்கு பிறரு கிலோ மீட்டருக்கு ரூ.100ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: