ஓமந்தூரார் பன்நோக்கு மருத்துவமனையில் நோயாளிகளின் உதவியாளர்கள் ஊழியர்களுக்கு உணவு பொட்டலம்: கபாலீஸ்வரர் கோயில் சார்பில் வழங்கப்பட்டது

சென்னை: அரசு மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகள், உதவியாளர்களுக்கு மதிய வேளையில் அன்னதான திட்டம் மூலம் ஒரு லட்சம் உணவு பொட்டலங்கள் வழங்கப்படும் என்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்திருந்தார். 12ம் தேதி  முதல் இந்த திட்டம் அமலுக்கு வந்தது. மாநிலம் முழுவதும் அன்னதான திட்டம் செயல்படுத்தப்படும் 754 கோயில்களில் உணவு பொட்டலங்கள் தயார் செய்யப்பட்டு அந்தந்த பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளில் வழங்கப்பட்டது. இந்நிலையில் 1 லட்சம் உணவு பொட்டலங்கள் வழங்கும் வகையில் கோயில்களில் உணவு பொட்டலங்கள் எண்ணிக்கை அதிகப்படுத்த வேண்டும் என்று அறநிலையத்துறை உத்தரவிட்டிருந்தது.

அதன்பேரில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் 150 பயனாளிகளுக்கு மட்டுமே தயாரிக்கப்பட்ட நிலையில் கூடுதலாக 850 பொட்டலங்கள் என மொத்தம் 1000 பொட்டலங்கள் தயாரிக்கவும், திருவல்லிக்கேணி பார்த்த சாரதி கோயிலில் 200 உணவு பொட்டலங்கள், திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோயிலில் 400 உணவு பொட்டலங்கள், மாதவ பெருமாள் கோயிலில் 150 உணவு பொட்டலங்கள், முண்டகக்கண்ணியம்மன் கோயிலில் 100 உணவு பொட்டலங்கள், அப்பர்சுவாமி கோயிலில் 50 உணவு பொட்டலங்கள், தேனாம்பேட்டை பாலசுப்பிரமணியசுவாமி கோயிலில் 100 உணவு பொட்டலங்கள், திருவேட்டீஸ்வரர் கோயிலில் 50 உணவு பொட்டலங்கள், ஆதிபுரீஸ்வரர் கோயிலில் 25 உணவு பொட்டலங்கள், அகத்தீஸ்வரர் கோயிலில் 150 உணவு பொட்டலங்கள், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயிலில் 200 உணவு பொட்டலங்கள், தண்டீஸ்வரர் கோயிலில் 200 உணவு பொட்டலங்கள் என சென்னையில் மட்டும் 22 கோயில்களில் மொத்தம் 3375 உணவு பொட்டலங்கள் தயாரித்து வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.  

மேலும், மருத்துவமனைகளில் உணவு பொட்டலங்கள் விநியோகிக்கும் போது புகைப்படம் எடுக்க வேண்டும். அந்த புகைப்படத்தில் கோயில்களின் பெயரை குறிப்பிட வேண்டும். தினமும் விநியோகிக்கப்படும் விவரங்களை பிற்பகல் 2 மணிக்கு அறநிலையத்துறை தலைமை அலுவலகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று கோயில் அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் நிர்வாகம் சார்பில் 1000 உணவு பொட்டலங்கள் தயார் செய்து ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள பன்நோக்கு மருத்துவமனை வளாகத்தில் மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் நோயாளிகளின் உதவியாளர்களுக்கு நேற்று விநியோகிக்கப்பட்டன.

Related Stories: