விளையாட்டு உபகரணம் வாங்க சேமித்த பணத்தை முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்கிய சாதனை சிறுவன்

சென்னை: வில் வித்தை போட்டியில் உலக சாதனை படைத்த சிறுவன், உண்டியலில் சேமித்த பணத்தை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கினார். கொரோனா தொற்று பரவல் இரண்டாம் கட்டமாக அசுர வேகத்தில் பரவி வருகிறது. எனவே, ‘தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு பணிகளுக்கு தங்களால் இயன்ற உதவிகளை அனைவரும் வழங்க வேண்டும்’ என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். இதை ஏற்று நாள்தோறும் பலர் தங்களால் இயன்ற நிதியுதவிகளையும், மருத்துவ உபகரணங்களையும் வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில், வில் வித்தை போட்டியில் உலக சாதனை படைத்த 6 வயது சிறுவன், தான் உண்டியலில் சேமித்து வைத்த பணத்தை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார். சென்னை அண்ணாநகர் அன்னை சத்யா நகரை சேர்ந்தவர் ஜெயகுமார் (32). கோயம்பேடு மார்க்கெட்டில் கோணி வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி ஸ்ரீலேகா (28). இவர்களது மகன் ரிஷிதேவ் (6), அரும்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் முதல் வகுப்பு படித்து வருகிறார்.

இச்சிறுவன், கடந்த வருடம் வில்வித்தை போட்டியில் உலக சாதனை படைத்துள்ளார்.

அதற்காக, கடந்த 2 மாதங்களுக்கு முன், மு.க.ஸ்டாலின் அச்சிறுவனை நேரில் அழைத்து பாராட்டி, பரிசு வழங்கினார். ஏற்கெனவே உலக சாதனை படைத்த ரிஷிதேவ், அடுத்த சாதனைக்காக வில், அம்புகளை வாங்குவதற்கு கடந்த வருடம் முதல் உண்டியலில் பணம் சேமித்து வந்திருக்கிறார். இந்நிலையில், கொரோனா தடுப்பு பணிகளுக்கு அனைவரும் நிதியுதவி அளிக்க வேண்டுமென, முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து, உண்டியலில் சேமித்து வைத்திருந்த ரூ.5,550 பணத்தை நேற்று முன்தினம் தமிழக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு ரிஷிதேவ் அனுப்பி வைத்தார். இதனால், அந்த சிறுவனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Related Stories: