×

ஒன்றிணைவோம் வா.. வென்றிடுவோம் வா.. மக்களுக்கான உதவிகளை திமுகவினர் மேற்கொள்ள வேண்டும்: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: திமுகவின் சார்பில் ‘ஒன்றிணைவோம் வா’ செயல்திட்டத்தை மீண்டும் தொடங்கி, மக்களுக்கான உதவிகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திமுகவினருக்கு எழுதியுள்ள கடிதத்தில்
கூறியுள்ளார். இது குறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: முதல்வர் என்ற முறையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு நான் எழுதிய கடிதத்தில், நாள்தோறும் 500 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தமிழகத்திற்குத் தேவை என்பதை வலியுறுத்திக் கேட்டிருந்தேன். பிரதமர் விரைந்து அனுப்பிய பதிலில், உடனடியாக 419 மெட்ரிக் டன் ஆக்சிஜனை தமிழகத்திற்குத் தருகிறோம் என உறுதியளித்தார்.

இது நம் தேவைக்கு ஏற்ப முழுமையான அளவு இல்லையெனினும், மாநில அரசின் கோரிக்கைக்கு உடனடியாக செவிமடுத்துச் செயலாற்றியுள்ளார் பிரதமர். அவருக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் தேவைப்படும் அளவிலான ஆக்சிஜனையும் விரைந்து அனுப்பிட ஆவன செய்வார் என நம்புகிறேன். தமிழ்நாட்டிலேயே ஆக்சிஜன் உற்பத்தியைப் பெருக்குவதற்கும் உரிய நடவடிக்கைகளை தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசும், துறை சார்ந்த உயரதிகாரிகளும் மேற்கொண்டுள்ளனர். தனியார் அமைப்புகளும் ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கி உதவுகின்றன.

கொரோனா முதல் அலையின்போது தொடர்ச்சியான ஊரடங்கினால் எளிய மக்களும், மருத்துவ உதவி தேவைப்படுவோரும் நெருக்கடிக்குள்ளான நிலையில், திமுக சார்பில் ‘ஒன்றிணைவோம் வா’ என்ற செயல்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. உதவி எண் வழங்கப்பட்டு, அதற்கு வரும் அழைப்புகளின் அடிப்படையில் தமிழகம் தழுவிய அளவில் திமுகவினர் ஆற்றிய அரும்பணி பலருக்கும் பேருதவியாக இருந்தது. மக்கள் பணியில் நம் திமுகவின் சென்னை மேற்கு மாவட்டச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான அன்பழகன் தன் இன்னுயிர் ஈந்ததை யாரால்தான் மறக்க முடியும். அந்த அளவுக்குப் பேரிடர் காலத்தில் திமுகவின் களப்பணி அமைந்திருந்தது.

சட்டப் பேரவைத் தேர்தலின் வாக்குப்பதிவு நிறைவடைந்த பிறகு, கொரோனா இரண்டாவது அலை குறித்த எச்சரிக்கையினை மருத்துவர்கள் தெரிவித்தபோதும், ஆட்சி அமையட்டும் என்று காத்திராமல், ஆளுங்கட்சியாக இருந்தாலும் எதிர்க்கட்சியாக இருந்தாலும் மக்கள் தொண்டாற்றுவதே திமுகவின் முதல் பணி என்ற அடிப்படையில், உங்களில் ஒருவனான நான் வைத்த வேண்டுகோளை ஏற்று கபசுரக் குடிநீர், முகக்கவசம், சானிடைசர் உள்ளிட்டவற்றை வழங்கி திமுகவினர் மேற்கொண்ட பணிகள் பொதுமக்களுக்குப் பாதுகாப்பானதாக இருந்ததுடன், விழிப்புணர்வையும் ஏற்படுத்தியது.

ஆட்சியின் சார்பில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுடன் திமுகவின் சார்பில் ‘ஒன்றிணைவோம் வா’ செயல்திட்டத்தை மீண்டும் தொடங்கி, மக்களுக்கான உதவிகளை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். திமுகவின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சட்டப்பேரவை உறுப்பினர்களுடன், நாடாளுமன்ற மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்களும், திமுகவின் அனைத்து நிர்வாகிகளும், செயல்வீரர்களும், திமுக தொண்டர்களும் களப்பணியாற்றி இந்தப் பேரிடர் நேரத்தில் மக்களின் அடிப்படை - அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றிட வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

1967ம் ஆண்டு முதன்முதலாக திமுக ஆட்சி அண்ணா தலைமையில் அமைந்தபோது, சீரணித் தொண்டர் படை என்ற அமைப்பை உருவாக்கினார். மக்களுக்கு உதவிடும் வகையிலும் அரசுக்குத் துணையாக இருந்திடும் வகையிலும் செயல்படுவதே சீரணித் தொண்டர் படையின் பணியாக இருந்தது. அத்தகையப் படையினரைப் போலப் பேரிடர் காலத்தில் திமுகவினர் மக்களுக்கு உறுதுணையாக இருந்து பணியாற்ற வேண்டும். கொரோனா பாதிப்பிலிருந்து தமிழகத்தை மீட்க, மக்கள் இயக்கமாகச் செயல்படுவோம் என ஏற்கனவே வேண்டுகோள் விடுத்திருந்தேன். அதன் முதற்கட்டமாக, திமுகவினர் களப்பணியாற்றிட வேண்டுகிறேன். குறிப்பாக, சட்டப்பேரவை உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட திமுகவினர், தங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ள மக்களின் பக்கம் உறுதியாக நிற்கவேண்டிய காலகட்டம் இது. அனைத்துக் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களிடமும் இதே வேண்டுகோளை முன்வைத்துள்ளேன்.

திமுகவினர் எப்போதும் போல களப்பணியாற்றுவதுடன், நம் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையின் காரணமாகக் கூடுதல் பொறுப்புடனும், தக்க பாதுகாப்பு ஏற்பாடுகளுடனும் பேரிடர் காலத்தில் பொதுமக்களுக்கு உதவிட வேண்டும் எனவும், அரசின் விதிமுறைகளுக்குட்பட்டு தனி மனித இடைவெளியைக் கடைப்பிடித்து உதவிகளை வழங்கிட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். முதலமைச்சர் என்ற மாபெரும் பொறுப்பைத் தோள்களில் சுமந்திருக்கும் உங்களில் ஒருவனான நானும் உடன்பிறப்புகளைப் போலவே களத்தில் இருப்பேன்.  களப்பணியாற்றுவோம்; கண்ணீரைத் தடுப்போம். ஒன்றிணைவோம் வா.. பேரிடர் காலத்தை வென்றிடுவோம் வா. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

* புத்தகம் போதும் பூங்கொத்து வேண்டாம்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை:
கொரோனா என்ற பெருந்தொற்று நாட்டையும் நாட்டு மக்களையும் அச்சுறுத்தி வரும் இந்தச் சூழ்நிலையை எதிர்கொள்ளத் தமிழக அரசு கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மருத்துவக் கட்டமைப்புகளின் மூலமாக நோய்த் தொற்றிலிருந்து மீளவும், முழு ஊரடங்கு காரணமாகத் தொற்று பரவாமல் தடுக்கவும் அரசு களப்பணி ஆற்றி வருகிறது. கொரோனா தடுப்புப் பணிகளுக்கான கூடுதல் செலவினங்களுக்குப் பயன்படுத்திக் கொள்ளக் கருணை உள்ளத்துடன் முதலமைச்சர் நிவாரண நிதிக்குப் பலரும் நிதி உதவியை வழங்கி வருகிறார்கள்.

இதன் பொருட்டு என்னைச் சந்திக்கவும், வாழ்த்துகளைத் தெரிவிக்கவும் வருபவர்கள் பூங்கொத்து, பொன்னாடைகள் ஆகியவற்றைத் தவிர்க்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். பொதுவாகவே இவற்றைத் தவிர்த்து புத்தகங்கள் வழங்குங்கள் என்று நான் தொடர்ந்து வலியுறுத்தி வருபவன் என்பதை அனைவரும் அறிவீர்கள். எனவே, பூங்கொத்துகள், பொன்னாடைகளை உறுதியாகத் தவிர்க்கக் கேட்டுக் கொள்கிறேன். மேலும், அமைச்சர்களை, சட்டமன்ற உறுப்பினர்களை அவரவர் மாவட்டங்களுக்கும் சொந்தத் தொகுதிகளுக்கும் சென்று கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபடக் கேட்டுக் கொண்டுள்ளேன். இவ்வாறு சென்றுள்ள அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு வரவேற்புகள் தரப்பட்டதாகச் செய்திகள்
வருகின்றன.

தொற்றுக் காலத்தில் இதுபோன்ற வரவேற்பை முழுமையாகத் தவிர்க்க வேண்டும். வரவேற்பு வளைவுகள், பதாகைகள் ஆகியவற்றைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். இக்கட்டுப்பாடுகளை மீறுபவர்களை, சம்பந்தப்பட்ட அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்களே கண்டிக்க வேண்டும்.கொரோனா பெருந்தொற்று பரவி வரும் இந்த நெருக்கடியான காலகட்டத்தில், அதிலிருந்து மக்களைக் காப்பாற்றும் பெரும் பொறுப்பில் மட்டுமே முழுமையாகக் கவனம் செலுத்த வேண்டும். நாம் நமது செயல்களின் மூலமாக மக்கள் நெஞ்சங்களில் இடம்பிடிப்போம். நின்று நிலைபெறும் சாதனைகளின் மூலமாக மக்களின் அன்பைப் பெறுவோம். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

Tags : Chief Minister ,Tamil Nadu ,BC ,Q. ,Stalin , Let's unite .. Let's win .. DMK should help the people: Tamil Nadu Chief Minister MK Stalin's letter
× RELATED தமிழ்நாட்டில் கோடை வெப்பத்தை...