கொரோனா தொற்றால் தாய், தந்தை மரணம்: அநாதையாகும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு..! நோயாளிகளிடம் எழுதி வாங்க மருத்துவமனைகளுக்கு உத்தரவு

புதுடெல்லி: கொரோனா தொற்றால் தாய், தந்தையை இழந்த குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்த நிலையில், அந்த குழந்தைகள் அநாதையாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதனால், சம்பந்தப்பட்ட நோயாளிகளின் குழந்தைகளின் விபரங்களை எழுதி வாங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா தொற்று நோய் பல குடும்பங்களை புரட்டிபோட்டுள்ளது. தொற்று பாதிப்பால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் எதிர்காலம் பெரும் கேள்விக்குறியாக மாறி வருகிறது. கடந்த வாரத்தில் மட்டும், சிறுவர் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் (என்சிபிசிஆர்), தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய இலவச தொலைபேசி ஆலோசனை மையத்திற்கு குறைந்தது 17 பேர் பேசியுள்ளனர். அவர்கள், கொரோனாவால் பெற்றோரை இழந்து அனாதையான குழந்தைகளைத் தத்தெடுப்பது குறித்து ஆலோசனைகளை கேட்டுள்ளனர். அதன்படி, குர்கிராமை சேர்ந்த ஒரு பெண், ‘கொரோனா காரணமாக பெற்றோரை இழந்த குழந்தைகள் உள்ளனரா? அவர்களை தத்தெடுக்கும் செயல்முறைகள் என்ன?’ என்று கேட்டுள்ளார்.

அதேபோல், டெல்லியைச் சேர்ந்த 27 வயது இளைஞர் ஒருவர், தத்தெடுப்பு தொடர்பான ஆலோசனைகளை கேட்டுள்ளார். மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஒருவர், ‘கொரோனா காரணமாக பெற்றோரை இழந்த ஒரு குழந்தையை தத்தெடுக்க என்னுடைய குடும்பத்தினர் விரும்புகிறார்கள். அதற்கு உதவ முடியுமா?’ என்று கேட்டுள்ளார். இவ்வாறாக பலரும் ஆணையத்தின் உதவி சேவை மையத்தில் ஆலோசனைகளை கேட்கின்றனர். ஒரு ஆய்வு அறிக்கையின்படி, கொரோனாவின் இரண்டாவது அலையால், 1000க்கும் மேற்பட்ட குழந்தைகள் பெற்றோரை இழந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் குழந்தையை தத்தெடுப்பது என்பது அவ்வளவு எளிதான விஷயம் இல்லை என்ற நிலையில், மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி கடந்த வாரம் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ‘கொரோனா காரணமாக பெற்றோரை இழந்த குழந்தைகள் பற்றிய தகவல்கள் கிடைத்தால், காவல்துறை அல்லது மாவட்ட குழந்தைகள் நலக் குழுவிடம் தெரிவிக்க வேண்டும். 1098 என்ற கட்டணமில்லா ‘சைல்டுலைன்’ எண்ணில் அழைத்து புகார் தெரிவிக்கலாம். அநாதைக் குழந்தையைத் தத்தெடுப்பது குறித்து குழந்தைகள் நலக் குழுமத்திடம் ஆலோசனைகளை பெற வேண்டும்’ என்றார். இதற்கிடையே, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சக செயலாளர் ராம் மோகன் மிஸ்ரா, மத்திய சுகாதார துறை செயலாளர் ராஜேஷ் பூஷனுக்கு எழுதிய கடிதத்தில், ‘அனைத்து மருத்துவமனைகள் மற்றும் கொரோனா நோயாளிகள் பராமரிப்பு மையங்களில் நோயாளிகளை அனுமதிக்கும் போது அவர்களிடம் ஒரு படிவத்தை கொடுத்து, சில விபரங்களை பூர்த்தி செய்ய வேண்டும்.

அதில், சம்பந்தப்பட்ட ேநாயாளிக்கு ஏதாவது நேர்ந்தால், அவர்களின் குழந்தைகளை யாருடைய பொறுப்பில் கவனிக்க வேண்டும் என்பதை தெரிவிக்க வேண்டும். சம்பந்தப்பட்டவரின் குழந்தைகள் தவறான நபர்களின் கைகளில் சிக்க நேரிடும் என்பதால், இதனை கட்டாயம் பின்பற்ற வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார். அதன் தொடர்ச்சியாக, பெற்றோர்கள் தங்கள் நம்பகமான உறவினரின் பெயரை மருத்துவமனைகளில் தெரிவிக்க வேண்டும் என்றும், ஏதேனும் அசம்பாவிதங்கள் நடந்தால் சம்பந்தப்பட்ட மருத்துவமனைகள், குழந்தைகள் நலக் குழுக்களிடம் தகவல்களை தெரிவிக்க வேண்டும் என்றும் மத்திய சுகாதாரத் துறை மாநிலங்களுக்கு அறிவுறுத்தி உள்ளது.

Related Stories:

>