கொரோனாவால் ஒன்றரை ஆண்டாக விமான சேவை முடக்கம்: புதிய டெர்மினல் கட்டுமான பணி 2022ல் நிறைவேறுமா?..பல ஆயிரம் கோடி வருவாய் இழப்பை சந்தித்துள்ள சென்னை ஏர்போர்ட்

மீனம்பாக்கம்: சென்னை மாநகரம் வந்தாரை வாழ வைக்கும் பூமி. தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாட்டினரை சேர்ந்த பலர் பிழைப்பு நடத்தி வருகின்றனர். இவர்கள், தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வதென்றால் பெரும்பாலும் பஸ், ரயில் மற்றும் கார்களை பயன்படுத்துகின்றனர். வசதி படைத்த சிலர் மற்றும் ஒருசில நடுத்தர வர்க்கத்தினர் அவசர வேலையாக விமான சேவையை பயன்படுத்தி வருகின்றனர். சென்னை மீனம்பாக்கத்தில் அமைந்துள்ள விமான நிலையம், போக்குவரத்துக்கு மிகவும் சிறந்ததாகும். 2000- 2001ம் ஆண்டுவாக்கில் மிகவும் குறைவான விமான சேவைத்தான் இருந்தது. உள்நாடுகளுக்கு வருகை விமானங்கள் 80, புறப்பாடு விமானங்கள் 80 என்ற அளவில் இயக்கப்பட்டது. சர்வதேச விமானங்கள் 10 முதல் 12 வரை இயக்கப்பட்டது. 2004ம் ஆண்டு வரை டெல்லி, ஐதராபாத் கொல்கத்தா ஆகிய இடங்களுக்கு உள்நாட்டு விமானங்கள் சகஜமாக இயக்கப்பட்டது. ஆனாலும் தமிழகத்திற்குள் என எடுத்து கொண்டால், சென்னையில் இருந்து மதுரைக்கு மட்டும் ஏர் இந்தியா விமானம் இயக்கப்பட்டது. அதற்கு பிறகு விமான சேவை வளர்ச்சியடைய தொடங்கியது.

குறிப்பாக கோவை, திருச்சிக்கு அதிகளவில் விமானங்கள் இயக்கப்பட்டது. தூத்துக்குடிக்கும் தனியார் நிறுவனம், குறிப்பிட்ட அளவில் விமானங்களை இயக்கியது. சில காரணங்களால் அந்த சேவையும் திடீரென நிறுத்தப்பட்டது. பின்னர் சரி செய்யப்பட்டு தூத்துக்குடி, திருச்சி, கோவை, சேலம் ஆகிய இடங்களுக்கு விமான சேவை அதிகரிக்கப்பட்டது. 2005ம் ஆண்டில் விமான சேவையில் ஓரளவு வளர்ச்சியடைந்தது. உள்நாடுகள் மற்றும் வெளிநாடுகளுக்கு தனியார் நிறுவனங்கள், அதிகளவில் விமானங்களை இயக்கியது. உள்நாட்டு மற்றும் பன்னாட்டு முனையம் கடந்த 2012ம் ஆண்டு புதிதாக கட்டப்பட்டு செயல்பட்டு வருகிறது. பழைய முனையங்களான அண்ணா, காமராஜர் முனையங்கள் இடிக்கப்பட்டு விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் தான் 2019, அக்டோபர் மாதம் விமான சேவையில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்பட்டது. தினமும் புறப்பாடு விமானங்கள் 250, வருகை விமானங்கள் 250 என இயக்கப்பட்டது. மும்பை, டெல்லிக்கு அடுத்தபடியாக சென்னை விமான நிலையம் 500வது விமான சேவை என்ற சாதனையை படைத்தது. கடந்தாண்டு (2020) ஜனவரியில் உள்நாடுகளுக்கு புறப்பாடு விமானம் 292, வருகை விமானம் 292 என இயக்கப்பட்டது. 35 ஆயிரம் பேர் வரை பயணம் செய்தனர். சர்வதேச விமானங்களை பொருத்தவரையில் புறப்பாடு, வருகை என 57 விமானங்கள் இயக்கப்பட்டது.

10 ஆயிரம் முதல் 12 ஆயிரம் பேர் வரை பயணம் செய்தனர். ஆண்டுக்கு, ஒன்றரை கோடி பயணிகள் இந்த விமான நிலையத்தை பயன்படுத்துகிறார்கள். ஆண்டுக்கு 3 லட்சம் டன்கள் சரக்கு கையாளப்படுகிறது. இந்நிலையில்தான் கொரோனா தொற்றின் முதல் அலை வீச தொடங்கியது. சீனாவின் வூகான் மாகாணத்தில் இந்த தொற்று பரவ தொடங்கியது. பல நாடுகளுக்கு பரவ ஆரம்பித்ததால் மக்கள் பீதியடைந்தனர். உலக நாடுகளை புரட்டிபோட்ட இந்த வைரசின் தாக்கம் இந்தியாவிலும் பரவ ஆரம்பித்தது. இதனால் கடந்தாண்டு ஜனவரி 22ம் தேதி முதல் வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு வரும் பயணிகள் கண்டிப்பாக கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு கூறியது. அதனால் சீனா, ஹாங்காங் உள்ளிட்ட 5 நாடுகளில் இருந்து வரும் பயணிகளை தொற்று பரிசோதனை செய்ய சுகாதார துறை சார்பில் சிறப்பு கவுன்டர்கள் அமைக்கப்பட்டது. பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு, காய்ச்சல், சளி, இருமல் இருந்தால் அவர்களை சிறப்பு ஆம்புலன்ஸ் மூலம் ஏற்றி முகாம்களில் தனிமைப்படுத்தி 14 நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்டது. அதற்கு பிறகுதான் அவர்கள் வீடுகளுக்கு அனுப்பப்பட்டனர். தொற்று இல்லாதவர்கள், ஓரிரு நாட்களில் வீடுகளுக்கு திரும்பினர். இதனால் கடந்தாண்டு பிப்ரவரி 15ம் தேதி முதல் வெளிநாட்டு விமானங்களின் வருகை படிப்படியாக குறைய தொடங்கின.

அதே நேரத்தில் கேரளாவிலும் தொற்று அதிகமாக இருந்ததால் அங்கும் பயணிகள் செல்வதை பெருமளவில் தவிர்த்தனர். கடந்தாண்டு மார்ச் முதல் தமிழகத்திலும் தொற்று வேகமாக பரவ தொடங்கியது. இதனால் பயணிகள் மற்றும் விமான சேவைகளும் வெகுவாக குறைந்தது. இதனால் ஊழியர்களின் வேலை நேரம் குறைக்கப்பட்டது. அதே நேரத்தில் அவர்களின் சம்பளமும் குறைக்கப்பட்டது. பலர் வேலையில் இருந்தும் நீக்கப்பட்டனர். 2019ம் ஆண்டு அதிகமான விமானங்களை இயக்கிய சேவையில் சாதனை படைத்த நிலை மாறி, விமான சேவை பெருமளவு குறைந்ததால் விமான நிறுவனங்கள் மற்றும் பயணிகள் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்தனர். அதை நம்பி தொழில்புரிந்தவர்களும் தவித்தனர். இந்த நிலையில் தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகமானது. அதனால் கடந்தாண்டு மார்ச் 24ம் தேதி நள்ளிரவு முதல் சர்வதேச விமான நிலையம் மற்றும் உள்நாட்டு விமான நிலையம் மூடப்பட்டது. அதனால் பெரும்பாலான விமான நிறுவனங்கள் நஷ்டத்தை சந்தித்தன. பெரும்பாலான விமானங்கள், சரக்கு விமானங்களாக மாற்றப்பட்டு இயக்கப்பட்டது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், ஊழியர்கள் வேலையின்றி தவித்தனர். மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள், விமான நிலைய ஊழியர்கள் மற்றும் போலீசார் மட்டும் விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதற்கிடையில் வெளிநாடுகளில் இருந்து விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால், அங்கு சிக்கி தவித்த இந்தியர்கள், தாயகம் திரும்புவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து அவர்களது குடும்பத்தினர்கள், மத்திய-மாநில அரசிடம், ‘உறவினர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கோரிக்கை வைத்தனர். அதை ஏற்று, அவர்களை மீட்கும் பணி நடந்தது. கடந்தாண்டு மார்ச் 9ம் தேதி முதல் வெளிநாடுகளில் இருந்து மீட்டு வரப்பட்டவர்கள், 14 நாட்கள் முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்டு பின்னர் வீடுகளுக்கு அனுப்பப்பட்டனர். இதைத்தொடர்ந்து, உள்நாட்டு விமான சேவையும் ரத்து செய்யப்பட்டது. கடந்தாண்டு மார்ச் 25ம் தேதி முதல் மீண்டும் உள்நாட்டு விமான சேவை தொடங்கியது. புறப்பாடு விமானங்கள் 25, வருகை விமானங்கள் 25 என குறைந்தளவில் இயக்க அனுமதிக்கப்பட்டது. அப்ேபாது பயணிகளுக்கும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. கடந்தாண்டு ஜூன் 15ம் தேதி முதல் 50 புறப்பாடு, 50 வருகை விமானங்களுக்கு மட்டும் அனுமதிக்கப்பட்டது. இதனால் பயணிகளும் அதிகரித்தனர். இந்த நேரத்தில் கொரோனாவின் தாக்கம் குறைந்ததால் ஜூலை 15ம் தேதி முதல் புறப்பாடு விமானங்கள் அதிகரிக்கப்பட்டது. தொற்று பீதி நீங்கியதால் நவம்பர் முதல் உள்நாட்டு விமான சேவைக்கான தடை முழுமையாக நீக்கப்பட்டது.

தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்களில் பயணிகள் அதிகளவில் பயணிக்க தொடங்கினர். பொங்கல் பண்டிகையன்றும் விமான சேவை அதிகரித்தது. ஏராளமானோர் பயணித்தனர். இதனால் சென்னை விமான நிலையம் சகஜ நிலைக்கு திரும்பியது. இந்த நிலையில்தான் மார்ச் முதல் இந்தியாவில் கொரோனா தொற்றின் 2வது அலை வேகம் எடுத்தது. குறிப்பாக சென்னையில் இதன் தாக்கம் அதிகரித்தது. ஏராளமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டு பயணிகளின் எண்ணிக்கையும் குறைந்தது. இதனால் விமான நிலையம் வெறிச்சோடியது. அந்தந்த விமான நிறுவன ஊழியர்களின் சம்பளங்கள் குறைக்கப்பட்டது. பலர் வேலையில் இருந்தும் நீக்கப்பட்டனர். சர்வதேச நாடுகளில் இருந்து வரும் வந்தே பாரத் மற்றும் சிறப்பு விமானங்கள் குறைந்தளவில் இயக்கப்பட்டது. இதனால் பயணிகளின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. இந்த விமான நிலையத்தை நம்பி அப்பகுதியில் ஏராளமானோர் கடைகள், விடுதிகள், கார், ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் தனியார் ஒப்பந்த ஊழியர்கள் என பலர் உள்ளனர். அவர்கள், இந்த விமான நிலைய பயணிகளை நம்பியே உள்ளனர். தற்போது, விமான சேவை பெருமளவில் ரத்து செய்யப்பட்டதால் இவர்களது வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் விமான நிலையத்திலும் வருமானம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. இந்திய விமான நிலைய ஆணையத்தின் 2019-20 ஆண்டறிக்கையின்படி, மொத்த வருவாய் ரூ.12 ஆயிரத்து 837 கோடியாக கணக்கிடப்பட்டுள்ளது. 2018-19ம் ஆண்டு ரூ.14,132 கோடியாக உள்ளது. இந்த ஒரு ஆண்டில் மட்டும் ரூ.1295.52 கோடி குறைந்துள்ளது.

இந்த ஓராண்டில் மட்டும் இவ்வளவு குறைந்துள்ளது என்றால் 2020-21ம் ஆண்டில் விமானங்கள் இயக்கப்படவில்லை. இதனால் சுமார் ரூ.15 ஆயிரம் கோடிக்கு மேல் இழப்பை சந்தித்துள்ளது என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில் உள்நாட்டு முனையத்தையும் பன்னாட்டு முனையத்தையும் இணைக்கும் வகையில் புதிய முனையத்தை 2,467 கோடியில் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இது மட்டுமின்றி, அடுக்குமாடி மல்டிலெவல் கார் பார்க்கிங், ஷாப்பிங் மால்கள்,  கலையரங்கங்கள், நவீன வசதிகளுடன் விவிஐபி மற்றும் பயணியர் ஓய்வு விடுதி போன்றவைகளும் உள்ளடக்கியது. 2018ம் ஆண்டு  தொடங்கிய பணிகள் கொரோனா வைரஸ் பீதி, ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்டது. முதல் கட்ட பணிகள் 2020, செப்டம்பரில் முடிந்திருக்க வேண்டும். கொரோனா தொற்றால் தாமதம் ஏற்பட்டுள்ளது. 2ம்கட்ட பணிகள் 2022ம் ஆண்டுதான் முடியும் என்று கூறப்படுகிறது. தொற்று நடவடிக்கையில் இந்த அரசு முழு மூச்சுடன் ஈடுபட்டு வருகிறது. ‘என்றுதான் இந்த நிலை மாறுமோ’ என்ற ஏக்கத்தில் தொழிலாளர்கள் உள்ளனர். கொரோனா தொற்றில் இருந்து மக்களை காப்பதில் அரசு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது. அதனால்  விரைவில் அதற்கான மாற்றத்தை எதிர்பார்க்கலாம் என்பதில் ஐயமில்லை.

Related Stories:

>