குளச்சலில் விடிய விடிய கனமழை: விசைப்படகுகள், கட்டுமரங்கள் கடலுக்கு செல்லவில்லை

குளச்சல்: குளச்சல் பகுதியில் விடியவிடிய கனமழை பெய்ததால் குளச்சல் பகுதி  விசைப்படகுகள், கட்டுமரங்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. குளச்சல் கடல் பகுதியில் சுமார் 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும்,1000 க்கும் மேற்பட்ட பைபர் வள்ளங்களும்  மீன்பிடித்தொழில் செய்து வருகின்றன.ஒரு விசைப்படகு ஆழ்கடல் பகுதிவரை சென்று 10 நாட்கள் தங்கி மீன் பிடித்து வருவது வழக்கம். ஆழ்கடல் பகுதியில் தான் உயர் ரக மீன்களாகிய சுறா, இறால், கேரை, கணவாய் மற்றும் செம்மீன் எனப்படும் கிளி மீன்கள் கிடைக்கும்.

தற்போது குளச்சல் கடல் பகுதியில் கணவாய், நாக்கண்டம் போன்ற மீன்கள் கிடைத்து வரும் நிலையில் அரபிக் கடல் பகுதியில் பலத்த காற்று வீசும் என வானிலை அறிக்கை எச்சரித்து உள்ளது. இதனால் வரும் 15ம் தேதி வரை குமரி மாவட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன் துறை அறிவுறுத்தி உள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக குமரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று குளச்சல் பகுதியில் விடியவிடிய கனமழை பெய்தது.பாம்பூரி வாய்க்காலில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.வெள்ளியாகுளம் மழை வெள்ளத்தால் நிரம்பி மறுகால் பாய்ந்து செல்கிறது. பத்தறை வயல்களில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

கடலில் பலத்த காற்றும் வீசுவதால் ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்க சென்ற விசைப்படகுகள் பாதியிலேயே கரை திரும்பின. விசைப்படகுகள் பாதியிலேயே கரை திரும்பி நங்கூரம் பாய்ச்சி மீன்பிடித்துறைமுகத்தில் நிறுத்தப்பட்டன.இதுபோல் 1000 க்கும் மேற்பட்ட பைபர் வள்ளம், கட்டுமரங்களும் மீன்பிடிக்க செல்லவில்லை.அவை மணற்பரப்பில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.இதனால் குளச்சலில் இன்று மீன் வரத்து குறைந்தது.இதனால் மீனவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

Related Stories:

>