பேச்சிப்பாறை அணைக்கு 1,112 கனஅடி நீர் வருகை: குமரியில் சூறை காற்றுடன் விடிய, விடிய கன மழை: கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

நாகர்கோவில்: குமரி முழுவதும் நேற்று இரவு முதல் பெய்து வரும் கன மழையால், பேச்சிப்பாறை நீர் மட்டம் உயர்ந்து, கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை நீடித்து வந்த நிலையில், தற்போது அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி, புயலாக வலுப்பெற்று வருகிறது. இதன் காரணமாக குமரி மாவட்டம் உள்பட 9 மாவட்டங்களில் கன மழை இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்த நிலையில் நேற்று குமரி மாவட்டம் முழுவதும்  கனமழை பெய்தது. நேற்று காலையில் இருந்து  அவ்வப்போது மழை பெய்த நிலையில், நேற்று இரவு முதல்  பலத்த காற்றுடன் விடிய, விடிய மழை கொட்டியது. இந்த மழை இன்று காலை 6 மணி வரை நீடித்தது. இந்த மழை காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது. தற்போது கொரோனா ஊரடங்கு உள்ள நிலையில்,  பகல் 12 மணி வரை மட்டுமே பலசரக்கு கடைகள், காய்கறி மார்க்கெட்டுகள், இறைச்சி கடைகள் செயல்படுகின்றன. இதனால் காலை 5 மணிக்கே கடைகள் திறக்கப்படுகின்றன.

மழை பெய்து கொண்டிருந்ததால் காலையில் கடை திறக்க வந்த வியாபாரிகள் சிரமம் அடைந்தனர். இந்த மழை காரணமாக ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அணைகளுக்கான  நீர் வரத்தும் அதிகரித்தது. பேச்சிப்பாறை அணைக்கு காலை வரை 218 கன அடி தண்ணீர் தான் வந்து கொண்டு இருந்தது. நேற்று காலையில் இருந்து பெய்த மழை காரணமாக அணைக்கு வரும் தண்ணீரின் அளவு படிப்படியாக அதிகரித்தது. இன்று காலை 8 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 1,112 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையின் நீர் மட்டம் 41.60 அடியில் இருந்து 42.13 அடியாக உயர்ந்தது. அணையில் இருந்து 173 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர் மட்டம் 54.90 அடியில் இருந்து 55.75 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாகடிக்கு 537கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

சிற்றார் 1, 8.53 அடியாகவும், சிற்றார்2, 8.62 அடியாகவும் உள்ளன. பொய்கை 16.80 அடியாகவும், மாம்பழத்துறையாறு அணை 21.98 அடியாகவும் உயர்ந்துள்ளன.  அணைகளுக்கு தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்துள்ளது. இந்த நிலையில் புயல் சின்னம் உருவாகி, குமரி மாவட்டத்தில் கன மழை நீடிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இரு நாட்களுக்கு மழை நீடித்து என்பதால், கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணை நீர் மட்டம் 42 அடியை தாண்டி உள்ளது. மழை நீடிக்கும் பட்சத்தில் அணைக்கான நீர் வரத்து அதிகரிக்கும் என்பதால், அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவும் அதிகரிக்கும். எனவே குழித்துறை தாமிரபரணி கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மலையோர பகுதிகளில் இன்று காலையில் இருந்து மழை நீடித்து வருகிறது.

புயல் சின்னம் நாளை வலுப்பெறும்

அரபிக்கடல் பகுதியில் நேற்று முன்தினம் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது. அது தற்போது புயலாக வலுப்பெற்று வருகிறது. இது வடக்கு நோக்கி நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று, இடி மின்னல் மற்றும் சூறைக்காற்றுடன் கனமழை மற்றும் மிக கனமழை பெய்யும். பிற மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யும். மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், தென் கடலோர மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் நாளை (15ம் தேதி) ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் சூறைக்காற்றுடன் கனமழை பெய்யும். இதே நிலை 17ம் தேதி வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்–்கப்படுகிறது.

இரணியலில் 28 செ.மீ. மழை

மாவட்டத்தில் அதிகபட்சமாக இரணியலில் 280 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இது 28 செ.மீ. மழை ஆகும். குழித்துறையில் 108 மில்லி மீட்டரும், கோழிப்போர்விளையில் 115 மில்லி மீட்டரும், முள்ளங்கினாவிளையில் 108 மில்லி மீட்டரும், குருந்தன்கோட்டில் 120.6 மில்லி மீட்டரில் மழை பதிவாகி உள்ளது. மற்ற இடங்களில் பதிவான மழை அளவு (மில்லி மீட்டரில் வருமாறு): பூதப்பாண்டி 22.6, சிற்றார்1 - 78.4, களியல் 85, கன்னிமார் 35.2, கொட்டாரம் 23.2, மயிலாடி 50.4, நாகர்கோவில் 65, பேச்சிப்பாறை 85, பெருஞ்சாணி 56.6. புத்தன் அணை 55.4, சிற்றார்2 - 67, சுருளோடு 54, தக்கலை 82, குளச்சல் 26.4, பாலமோர் 32.4, மாம்பழத்துறையாறு 87, ஆரல்வாய்மொழி 8, அடையாமடை 39, ஆனைக்கிடங்கு 88.2, முக்கடல் 33 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. 1 அடிக்கும் குறைவாக இருந்த முக்கடல் அணையின் நீர் மட்டம் தற்போது பெய்த மழை காரணமாக 1.02 அடியை எட்டி உள்ளது.

Related Stories: