டெல்டாவில் இடி, மின்னலுடன் கோடை மழை

திருவாரூர்: காவிரி டெல்டா பகுதியில் நேற்று பரவலாக இடி, மின்னலுடன் கோடை மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். தமிழகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல் மாநிலம் முழுவதும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அவதிப்பட்டு வந்தனர். குறிப்பாக, இரவு நேரங்களில் நிம்மதியாக தூங்க முடியாமல் மக்கள் சிரமப்பட்டனர். இந்நிலையில் அக்னி நட்சத்திரம் கடந்த 4ம் தேதி துவங்கியதால் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்தது. இதனால் வெப்ப சலனத்தை தாங்க முடியாமல் பெரிதும் மக்கள் அவதிப்பட்டனர்.

வெப்ப சலனம் மற்றும் தென்மேற்கு பருவமழை காரணமாக மாநிலம் முழுவதும் அவ்வப்போது லேசான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் நேற்று மதியம் இடி, மின்னலுடன் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதேபோல் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் பலத்த மழை பெய்தது. திருவாரூர் மாவட்டம் முழுவதும் பரவலாக நேற்று மதியம் 12.30 மணி முதல் 1.30 மணி வரை இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்தது. இதன் காரணமாக திருவாரூர் நகரில் பழைய பஸ் நிலையம், தெற்கு வீதி, நேதாஜி சாலை, கமலாலயம் வடகரை, ரயில்வே கீழ்பாலம் உட்பட பல்வேறு இடங்களில் மழைநீர் குளம்போல் தேங்கியது.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி, க.பரமத்தி பகுதியில் நேற்று மாலை 2 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது. திருச்சி மாவட்டம் முசிறி மற்றும் சுற்றுவட்டார பகுதியிலும் கோடை மழை பெய்தது. டெல்டா மாவட்டம் முழுவதும் நேற்று பரவலாக கோடை மழை பெய்ததால் ஆங்காங்கே மழைநீர் தேங்கி நின்றது. இதனால் பொதுமக்கள் வெளியில் நடமாடவும், அத்தியாவசிய தேவைகளுக்காக வாகனங்களிலும் சென்று வரவும் மக்கள் சிரமப்பட்டனர். பரவலாக மழை பெய்தால் வெப்பம் தணிந்து ஓரளவு குளிர்ந்த காற்று வீசியது. அக்னி நட்சத்திர வெயிலால் சிரமப்பட்ட மக்களுக்கு இந்த மழை ஓரளவு ஆறுதலை தந்துள்ளது. மேலும் விவசாயத்துக்கு கோடை மழை பெரிதும் பயனுள்ளதாக இருக்கும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

Related Stories: