கொரோனா நோயாளிகளின் சடலங்களை எரிக்க திரி அடுப்பு முறையில் நடமாடும் மின்சார தகன மேடை: பஞ்சாப் ஐஐடி கண்டுபிடிப்பு

புதுடெல்லி: கொரோனா நோயாளிகளின் சடலங்களை எரிக்க திரி அடுப்பு முறையிலான நடமாடும் மின்சார தகன மேடையை பஞ்சாப் ஐஐடி கண்டுபிடித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் சடலங்களை தகனம் செய்யும் போது ஏற்படும் தாமதங்கள், இடப்பற்றாக்குறை போன்றவற்றால் வடமாநிலங்களில் ஆறுகளில் சடலங்கள் தூக்கி வீசப்படுகின்றன. இந்நிலையில், பஞ்சாப் மாநிலம் ரோபாரில் உள்ள இந்திய தொழில்நுட்ப கழகம், நடமாடும் மின்சார தகன முறையின் மாதிரியை உருவாக்கியுள்ளது.‌ இதில் மரத்துண்டுகள் பயன்படுத்தப்பட்ட போதிலும், புகை வெளிவராத வகையிலான தொழில்நுட்பத்தில் முதன்முறையாக உருவாக்கப்பட்டுள்ளது. பொதுவாக சடலங்களை எரிக்க பயன்படுத்தப்படும் மரத்துண்டுகளின் எண்ணிக்கையில்  பாதி அளவு மட்டுமே இதில் பயன்படுத்தப்படும்.

இதிலுள்ள வெப்பமூட்டும் தொழில்நுட்பத்தின் காரணமாக சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக விளங்குகிறது.இந்தத் தயாரிப்பை உருவாக்கிய இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் தொழில்துறை ஆலோசனை மற்றும் ஆதரவளிக்கப்பட்ட ஆராய்ச்சி மற்றும் தொழில் இடையீடின் தலைவர் பேராசிரியர் டாக்டர் ஹர்ப்ரீத் சிங் கூறுகையில், ‘புதியமுறையில் 1044 டிகிரி செல்சியஸில் வரை வெப்பமடைவதால் தொற்று முழுவதும் நீக்கப்படும். திரி அடுப்பின் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு தகனம் செய்யப்படும். இந்த  எரியூட்டியில் சக்கரங்கள் பொருத்தப்பட்டு இருப்பதால், இதை ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு எளிதில் கொண்டுச் செல்ல முடியும்.

மரத்துண்டுகளை அடிப்படையாகக்கொண்டு தகனம் செய்யும் பாரம்பரிய முறையில், 48 மணி நேரம் வரை தேவைப்படும் நிலையில், இந்தத் தொழில்நுட்பத்தின் மூலம் 12 மணி நேரத்தில் பணி முழுவதும் நிறைவடையும்’ என்றார். சடலங்களை எரிக்கும் போது, குறைவான மரத்துண்டுகள் பயன்படுத்தப்படுவதால் கரியமில வாயுவின் வெளிப்பாடு பாதி அளவாகக் குறைகிறது. இந்த தகன முறை குறித்து சீமா பாய்லர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஹர்ஜிந்தர் சிங் சீமா கூறுகையில், ‘இந்த தகன எரியூட்டியை சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் அனுமதியுடன் எந்த இடத்திற்கும் எளிதாக எடுத்துச் செல்லலாம். தற்போதைய சூழலில் தகன இடங்களில் இடப்பற்றாக்குறையினால் மக்கள் அவதிப்படுவதால் இதுபோன்ற பிரச்னைகளை நீக்குவதில் நாங்கள் தயாரித்துள்ள புதிய முறை உதவிகரமாக இருக்கும்’ என்றார்.

Related Stories:

>