ஆக்சிஜன் ஏற்றி வருவதற்காக தமிழகத்தில் இருந்து ஒடிசாவுக்கு 5 டேங்கர் லாரிகள் அனுப்பினர்

திருவள்ளூர்: தமிழகத்துக்கு தேவையான ஆக்சிஜன் ஏற்றிவருவதற்காக 5 டேங்கர் லாரிகள் ஒடிசாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துவருவதால் அவற்றை தடுக்க தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருவதால் அவர்களுக்கு ஆக்சிஜன் தேவைகளும் அதிகம் தேவைப்படுகிறது. இதனால் கூடுதல் ஆக்சிஜன் தேவை என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். அத்துடன் பிற மாநிலங்களின் உதவியையும்  நாடியுள்ளார். இந்த நிலையில், தமிழக அரசின் வேண்டுகோளை ஏற்று ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் இருந்து விரைவு ரயில்கள் மூலம் டேங்கர் லாரிகளில் ஆக்சிஜன் தமிழகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதனிடையே தென்னக ரயில்வே உதவியுடன் முதன்முறையாக  திருவள்ளூரில் இருந்து நேற்று முன்தினம்  2 டேங்கர் லாரி அனுப்பி வைக்கப்பட்டன. நேற்றிரவு மேலும் 3 டேங்கர் லாரிகள் விரைவு ரயில்கள் மூலம் ஒடிசா மாநிலம் ரூர்கேலாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. திருவள்ளூர் ரயில் நிலையத்தில் இருந்து இதுவரை 5 காலி டேங்கர் லாரிகள் சென்றுள்ளது. இதன் மூலம் 66 டன் ஆக்சிஜன் தமிழகத்திற்கு கிடைக்க வாய்ப்புள்ளது. இந்த டேங்கர்களில் திரவ மருத்துவ ஆக்சிஜன் நிரப்பப்பட்டு மீண்டும்  திருவள்ளூர் ரயில் நிலையம் வந்து சேரும். அதன் பின் தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.

Related Stories: