ரம்ஜான் பண்டிகை கோலாகலம்: சமூக இடைவெளியுடன் வீடுகளில் தொழுகை

திருச்சி: ரம்ஜான் பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பள்ளிவாசல், தர்கா, ஈத்கா மைதானங்களில் சிறப்பு தொழுகை நடத்தப்படாவிட்டாலும் வீடுகளில் தொழுகை நடத்தி ரம்ஜான் பண்டிகை உற்சாகம் குறையாமல் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் ரம்ஜான் பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டு ரம்ஜான் பண்டிகையின்போது இஸ்லாமியர்கள் பள்ளிவாசல்கள், தர்காக்கள், ஈத்கா மைதானங்களில், புத்தாடைகள் அணிந்து ஒன்று கூடி சிறப்பு தொழுகை நடத்துவர். அப்போது ஒருவரையொருவர் ஆரத்தழுவி ரம்ஜான் வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்வர். பின்னர் உறவினர்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை கொண்டாடுவது வழக்கம். ஆனால் கடந்தாண்டு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் பள்ளிவாசல்கள், தர்க்காக்கள் மூடப்பட்டது. ைமதானங்களில் ஒன்று கூடவும் தடைவிதிக்கப்பட்டது. இதனால் இஸ்லாமியர்கள் தங்களது வீடுகளிலேயே சிறப்பு தொழுகை நடத்தினர்.

இதேபோல் 2வது ஆண்டாக இந்தாண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் தர்கா, பள்ளிவாசல்கள் மூடப்பட்டுள்ளது. இதனால் இஸ்லாமியர்கள் வீடுகளிலே சிறப்பு தொழுகை நடத்தி ரம்ஜான் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். புத்தாடைகள் அணிந்து இனிப்பு வழங்கி வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். நாகை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற நாகூர் தர்கா, சில்லடி தர்காக்கள், கடற்கரை மைதானத்தில் முஸ்லிம்கள் திரளாக பங்கேற்று சிறப்பு தொழுகை நடத்துவது வழக்கம். ஆனால் தற்போது ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுவதால் பள்ளிவாசல் மற்றும் மைதானங்களில் இன்று ரம்ஜான் பண்டிகை சிறப்பு தொழுகை நடைபெறவில்லை.

இஸ்லாமியர்கள் இன்று அவரவர் வீடுகளில் குடும்பத்தினருடன் சிறப்பு தொழுகை நடத்தினர். ரம்ஜான் பண்டிகையையொட்டி நண்பர்கள் செல்போன் மற்றும் வாட்ஸ்-அப் மூலம் பண்டிகை வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டனர். நண்பர்கள், உறவினர்களுக்கு முஸ்லிம்கள் பிரியாணி மற்றும் அசைவ உணவு வகைகளையும் வீடுகளுக்கு சென்று வழங்கினர். இதேபோல் திருச்சி, தஞ்சை, திருவாரூர், கரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, மயிலாடுதுறை மாவட்டங்களிலும் இஸ்லாமியர்கள் வீடுகளில் தொழுகை நடத்தினர். சிறப்பு தொழுகை நடத்தப்படாவிட்டாலும் வீடுகளில் தொழுகை நடத்தி ரம்ஜான் பண்டிகை உற்சாகம் குறையாமல் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

Related Stories: