ரம்ஜான் நோன்பின் போது இஸ்லாமியர்களுக்கு உணவு பரிமாறிய இந்து இளைஞர்களுக்கு பாராட்டு

கிருஷ்ணகிரி :  கிருஷ்ணகிரியில், ரம்ஜான் நோன்பின் போது இஸ்லாமியர்களுக்கு உணவு பரிமாறிய இந்து இளைஞர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. ரம்ஜான் நோன்பு கடந்த மாதம் 13ம் தேதி துவங்கியது. இதையொட்டி, கிருஷ்ணகிரி மிலாடிநபி விழாக்குழுவின் தலைவர் அஸ்லம், தனது ஜே.கே. கார்டன் ரெஸ்டாரெண்டில், நோன்பு கடைபிடிக்கும், 600 பேருக்கு தினமும் உணவு வழங்கி வந்தார்.

அதிகாலை 3 மணி முதல் 5 மணி வரை உணவுகளை தயாரித்து நோன்பு கடைபிடிக்கும் இஸ்லாமிய சகோதரர்களுக்கு உணவுகளை வழங்கி வந்தார். இதில் அவருக்கு உதவும் விதமாக இந்து சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞர்கள் தமிழ், மதன், அரவிந்தன், சந்துரு ஆகியோர் தினமும் நள்ளிரவு முதல் காலை வரை உடனிருந்து இஸ்லாமிய சகோதர்களுக்கு உணவு, குடிநீர், தேனீர் ஆகியவற்றை பரிமாறி வந்தனர்.

இந்நிகழ்ச்சியின் இறுதி நாளான நேற்று இந்த இளைஞர்களை பாராட்டும்விதமாக, கிருஷ்ணகிரி மாவட்ட அரசு தலைமை காஜி கலில்அகமத், துணை காஜி நசீர்அகமத் ஆகியோர் சால்வை அணிவித்து பாராட்டினர். மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக நடந்த இந்நிகழ்ச்சியை பல்வேறு தரப்பினர் பாராட்டினர். இந்நிகழ்ச்சியில், முன்னாள் கவுன்சிலர் கராமத், ஜாமிர், யாஹியா ஆகியோர் உடன் இருந்தனர்.

Related Stories: