தேன்கனிக்கோட்டை அருகே அலங்கார பூந்தொட்டிகள் தேக்கம்

தேன்கனிக்கோட்டை :  கொரோனா ஊரடங்கால் தேன்கனிக்கோட்டை அருகே 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அலங்கார பூந்தொட்டிகள் விற்பனையாகாமல் தேக்கமடைந்துள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே அகலக்கோட்டை பகுதியில் 100க்கும் மேற்பட்ட நர்சரி தோட்டங்கள் உள்ளன. இங்கு, ரோஜா மற்றும் அலங்கார செடிகள் பதியம் போட்டு உற்பத்தி செய்து கர்நாடகா, கேரளா, ஆந்திரா மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

குறிப்பாக கோடை சீசன் விற்பனைக்காக அலங்கார பூந்தோட்டிகள் டையான்டஸ், பிரிட்டோனியா, பால்வியா, கேலான்டாலா, வெர்டினியா உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட வகை அலங்கார பூந்தொட்டிகள் 100க்கும் மேற்பட்ட நர்சரிகளில் வளர்க்கின்றனர். மே, ஜூன் மாதங்களில் சுற்றுலா தலங்களான கொடைக்கானல், ஏற்காடு, பெங்களூர் லால்பார்க், கேரளா ஆகிய இடங்களில் நடைபெறும் மலர் கண்காட்சிக்கு இங்கிருந்து மொத்தமாக பூந்தொட்டிகளை வாங்கிச் செல்கின்றனர்.

மேலும் நட்சத்திர ஓட்டல்கள், திருமண நிகழ்ச்சிகள் உள்ளிட்ட வீடுகளில் அலங்காரத்திற்கு வாங்கி செல்கின்றனர். பதியம் போட்டு 6 மாதம் வளர்த்து மே மாத சீஷனுக்கு விற்பனைக்கு வருகிறது. இந்நிலையில், தற்போது கொரோனா 2வது அலை பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் விழாக்கள் தடைபட்டுள்ளதால் நர்சரிகளில் வளர்க்கப்பட்டுள்ள 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அலங்கார பூந்தொட்டிகள் தேக்கமடைந்துள்ளன. பூந்தொட்டிகள் விற்பனையாகாமல் தேக்கம் அடைந்துள்ளதால் விவசாயிகளுக்கு பல லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து நர்சரி உரிமையாளர் பைரவமூர்த்தி கூறுகையில், கோடை காலங்களில் நடைபெறும் மலர் கண்காட்சி, திருவிழா சீசனுக்காக வளர்க்கப்படும் அலங்கார மலர் செடிகள் ₹12 முதல் 20 வரை விற்பனை செய்யப்படும். கொரோனா ஊரடங்கல் தற்போது  விற்பனையாகாமல் தேங்கிக் கிடக்கின்றன. விற்பனையாகாத தொட்டிகளில் பூக்கள் பூத்து விட்டால் விற்பனை செய்ய முடியாது. புதிதாக பதியம் போட வேண்டும். இதனால், லட்சக்கணக்கில் செலவு செய்துள்ள விவசாயிகள் நஷ்டம் அடைந்துள்ளனர். எனவே, அரசு நர்சரி தோட்டம் அமைத்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றார்.

Related Stories: