×

நாங்க அந்த காலத்து ஆளு, கொரோனா எங்களுக்கு வராது... முதியோர் காட்டும் அலட்சியம் அபத்தமானது-மருத்துவ நிபுணர்கள் வேதனை

சேலம் : கொரோனா அறிகுறியுள்ள முதியவர்கள், உடனடியாக சிகிச்சைக்கு சேராமல் காலம் தாழ்த்துவது மிகவும் அபத்தமானது என்று டாக்டர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.கொரோனா பரவலின் 2வது அலை, தற்போது உச்சக்கட்டத்தில் உள்ளது. பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், இறப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில்  கொரோனா பாதிப்புகள் முற்றிய நிலையில், ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை கேட்டு வருபவர்களே தற்போது அதிகமாக உள்ளனர். அதிலும் இணை நோய்கள் உள்ள 50வயதுக்கு மேற்பட்டோரே, தனியார் மருத்துவமனைகள் கைவிட்ட நிலையில், அரசு மருத்துவமனைகளை நாடி வந்து கொண்டிருக்கின்றனர். இதற்கு அலட்சியமும் ஒரு முக்கிய காரணம் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.

இது குறித்து சேலத்தை சேர்ந்த மருத்துவ நிபுணர்கள் கூறியதாவது: கொரோனாவால் 30 முதல் 39 வயதுக்கு உட்பட்டவர்கள் 20.14 சதவீதம் பேரும், 40 முதல் 49 வயதுக்கு உட்பட்டவர்கள் 18.37 சதவீதம் பேரும், 50 முதல் 59 வயதுக்கு உட்பட்டவர்கள் 17.97 சதவீதம் பேரும், 60 முதல் 69 வயதுக்கு மேற்பட்டவர்கள் 11.13 சதவீதம் பேரும் கொரோனாவால் பாதிக்கப்படுவதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவித்துள்ளது. இந்த வகையில் முதியவர்களே அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர் என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அதோடு சர்க்கரை, ரத்தக்கொதிப்பு போன்ற இணை நோய்களும் இருந்தால் எளிதாக தொற்று பரவி விடுகிறது.

ஆனால் இதை உணராமல் முதியவர்கள், சிகிச்சைக்கு செல்ல தயங்குகின்றனர். அரசு மருத்துவமனைகளுக்கு தற்போது கொரோனா சிகிச்சைக்கு அழைத்து வரப்படும் முதியவர்களில் 80 சதவீதம் பேர், 50 சதவீத மூச்சுத்திணறல் பாதிப்புகளோடு வருவது வேதனைக்குரியது.  ‘‘நாங்க அந்த காலத்து ஆளு, எங்களை எந்த பாதிப்பும் ஒண்ணும் செய்யாது’’ என்று முதியவர்கள் கூறுகிறார்கள். ஆனால் அவர்களுக்கு காய்ச்சல், சளி, இருமல், தலைவலி, உடல்வலி, வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவர்களிடம் அழைத்துச் சென்று பரிசோதனை செய்ய வேண்டும்.

பொதுவாக எவ்வளவு ஆரோக்கியமானவராக இருந்தாலும் குறிப்பிட்ட வயதுக்கு மேல், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவது இயற்கையானது. எனவே அவர்கள் நம்பிக்கையுடன் இருந்தாலும் வீட்டில் இருப்பவர்கள், கொரோ னா அறிகுறியுள்ள முதியவர்களை வலியுறுத்தி சிகிச்சைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.

அதேபோல்  மழை, வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்களைப் போல், கொரோனா வைரஸ் என்பதும் மூச்சுக்காற்றில் பரவும் ஒரு இயற்கை பேரிடர் என்றே கூறலாம். இதை உணர்ந்து அனைவரும் தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது.இவ்வாறு மருத்துவ நிபுணர்கள் கூறினர்.

உறவினர்களுக்கும் பொறுப்பு வேண்டும்

‘‘கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், எதையும் பொருட்படுத்தாமல் சாலைகளில் வலம் வருபவர்களில் கணிசமானவர்கள் முதியவர்களாகவும் உள்ளனர். அவர்களிடம் போலீசார் கேட்டால் ‘கடைக்கு செல்கிறேன், சாப்பிட வந்தேன்’ என்று சொல்லிவிட்டு நகர்கின்றனர். இது போன்றவர்களை வெளியில் அனுப்பாமல் கண்காணிக்க வேண்டிய பொறுப்பு வீட்டிலிருக்கும் உறவுகளுக்கு வேண்டும்,’’ என்பதும் மருத்துவ நிபுணர்களின் வேண்டுகோளாக உள்ளது.

Tags : Corona , Salem: Doctors say it is absurd for the elderly with corona symptoms to delay treatment immediately
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...