சேலத்தில் தட்டுப்பாட்டை போக்க நவீன முறையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய திட்டம்-ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்

சேலம் : கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க, சேலம் மாவட்டத்தில் 11 தொகுதிகளிலும்  ஆக்சிஜன் உற்பத்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார். கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களுக்கு அமைச்சர்கள் மற்றும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமித்து நோயாளிகளுக்கு தேவையான உதவிகளை செய்யும்படி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி,சேலம் மாவட்டத்தில் கொரோனா தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.

மாவட்ட கலெக்டர் ராமன், எம்பிக்கள் பார்த்திபன், பொன்கவுதம சிகாமணி, சின்ராஜ், சேலம் வடக்கு தொகுதி எம்எல்ஏ வக்கீல் ராஜேந்திரன்,மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ்குமார், மாவட்ட எஸ்.பி தீபாகனிக்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மின்சாரம்,மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கலந்து கொண்டு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

தொடர்ந்து அமைச்சர் செந்தில்பாலாஜி பேசியதாவது: சேலம் மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க, முழு ஊரடங்கை தீவிரப்படுத்த வேண்டும். அந்தந்த பகுதிகளில் அவசர தேவைக்கு மட்டும் பொதுமக்கள் வெளியே சென்று வர அனுமதிக்க வேண்டும்.தேவையில்லாமல் சாலைகளில் சுற்றி வரும் வாகன ஓட்டிகளை போலீசார் திருப்பி அனுப்ப வேண்டும்.மாவட்டம் முழுவதும் 28 சிகிச்சை மையங்கள் அமைத்து கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அங்கு 4 ஆயிரத்து 234 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்கள் அனைவருக்கும் தரமான மற்றும் பாதுகாப்பான சிகிச்சை கிடைக்க வேண்டும்என்பதே முதல்வரின்  வேண்டுகோள். அரசு,தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் சேலம் மாவட்டத்தில் 11 தொகுதிகளிலும் மாடர்ன் ஆக்சிஜன் சிஸ்டம் என்ற முறையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது 2 இடங்களில் அதனை வைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.இதன் மூலம் தினமும் 440 கொரோனா நோயாளிகள் பயன்பெறுவர்.இன்னும் 10 நாளில் இந்த பணிகள் முடிவடைந்து பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.தமிழகத்தில் ஒரு உயிரிழப்பு கூட நடக்கக்கூடாது என்பதே முதல்வரின் உத்தரவாகும்.

அரசு மருத்துவமனைகள்,சிறப்பு சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு தரமான உணவு வழங்குவதோடு,தினமும் 3 வேளையும் முட்டை வழங்க வேண்டும். கொரோனா உயிரிழப்புகள் பற்றி உண்மையான விவரத்தை மக்களிடம் எடுத்துக் கூற வேண்டும். கிராமப்புறங்களில் ஆட்டோக்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு அமைச்சர் ெசந்தில்பாலாஜி பேசினார். கூட்டத்தில்,அரசு மருத்துவமனை டீன் முருகேசன்,மாவட்ட வருவாய் அலுவலர் திவாகர், மாநகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன்,மாநகர் நல அலுவலர் பார்த்திபன் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: