நிறைய பேருக்கு அவரு உதவி செய்யணும்... உண்டியல் காசை ஆக்சிஜன் வாங்க முதல்வருக்கு கொடுக்கப்போறேன்...வைரலாகும் 5வயது சிறுவனின் வீடியோ பேச்சு

சேலம் : உண்டியலில் சேர்த்து வைத்த காசை முதல்வரிடம் ஆக்சிஜன் வாங்குவதற்கு கொடுப்பேன் என்று சேலத்தை சேர்ந்த 5வயது சிறுவன் பேசும் வீடியோ, வைரலாகி நெகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.கொரோனா தடுப்பு பணிகளுக்கு அனைவரும் தன்னால் இயன்ற உதவிகளை செய்யவேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். இதையடுத்து பலரும் நிதி உதவி வழங்கி வருகின்றனர். இந்நிலையில் சேலத்தை சேர்ந்த 5வயது சிறுவன், தான் உண்டியலில் சேர்த்து வைத்த காசை, முதல்வரிடம் ஆக்சிஜன் வாங்குவதற்காக கொடுப்ேபன் என்று மழலைத் தமிழில் பேசும் வீடியோ வைரலாகி காண்போரை நெகிழ வைத்து வருகிறது.

சேலம் டால்மியா போர்டு பகுதியை சேர்ந்த சண்முகவேல்-அழகுசுசீலா தம்பதியின் மகன் வசியன்பிரபாகர்(5). இவனும் இவனது அண்ணன் கவின்பூபதியும் அருகருகே அமர்ந்து உரையாடுகின்றனர். அப்போது உண்டியலில் சேர்த்து வைத்த பணத்தை முதல்வர் மு.க.ஸ்டாலிடனிடம் கொடுக்கப்போகிறேன் என்று வசியன்பிரபாகர் கூறுகிறான். அருகிலிருக்கும் உறவினர் ஒருவர் இது தொடர்பாக சிறுவனிடம் கேள்வி எழுப்புகிறார்.

அதற்கு பதில் அளித்து சிறுவன் கூறுகையில், ‘‘ஸ்டாலின் தாத்தாவுக்கு நான் காசு கொடுக்கிறேன். இந்த கொரோனா காலத்தில் ஆக்சிஜன் வாங்குவதற்கு அவருக்கு நிறைய காசு வேணும். அதுக்காக நான் உண்டியலில் சேர்த்து வச்சிருக்கிற காசை குடுப்பேன். நாம காசு கொடுத்தா நிறைய பேருக்கு அவரால் ஆக்சிஜன் வாங்கி குடுத்து உதவமுடியும்,’’ என்கிறான்.

சிறுவயதிலேயே தம்மால் இயன்ற உதவியை அரசு மூலம் மக்களுக்கு செய்ய வேண்டும் என்ற இந்த மழலையின் கிள்ளை பேச்சு காண்போரின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இது குறித்து சிறுவனின் தந்தை சண்முகவேல் கூறுகையில், ‘‘எனது குழந்தைகளும், நானும் தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பதில்லை. ‘வெடிக்கு பதில் செடி’ என்று அவர்களிடம் கூறி, உண்டியலில் போட காசு கொடுப்பேன். அந்த காசுக்கு ஒவ்வொரு தீபாவளிக்கும் செடிகளை வாங்கி நடுவதை வழக்கமாக கொண்டுள்ளோம். அந்த வகையில் வரப்போகும் தீபாவளிக்கு செடிக்காக உண்டியலில் சேர்த்து வைத்துள்ள காசையே எனது மகன் வசியன், முதல்வருக்கு கொடுக்க வேண்டும் என்று கூறுகிறான்.

அவன் தொலைக்காட்சியில் செய்திகளை கூர்ந்து கவனிப்பான். சமீபத்தில் மதுரை சிறுவன், சைக்கிள் வாங்க சேர்த்த பணத்தை முதல்வருக்கு அனுப்பியதும் மனதில் ஆழமாக பதிந்து விட்டது. அவனது ஆசைப்படி, அந்த உண்டியலை கலெக்டரிடம் கொடுக்க உள்ளோம்,’’ என்றார்.

Related Stories: