அணைக்கட்டு தாலுகா அரசு மருத்துவமனையில் பயன்பாடின்றி கிடக்கும் கொரோனா வார்டை திறக்க வேண்டும்-படுக்கை வசதியின்றி நோயாளிகள் தவிப்பு

அணைக்கட்டு : அணைக்கட்டு தாலுகா அரசு மருத்துவமனையில் பயன்பாடின்றி கிடக்கும் கொரோனா வார்டை திறக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகாவில் நேற்று ஒரே நாளில் 36 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. தொடர்ந்து, அவர்களை சிகிச்சைக்காக வேலூர் அரசு, தனியார் மருத்துவமனைக்கு சுகாதாரத்துறையினர் அனுப்ப வைத்தனர்.

அணைக்கட்டு தாலுகாவில் கடந்த இரண்டு வாரமாக கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அதன்படி கடந்த 10 நாட்களில் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 300ஐ தான்டியுள்ளது. சுகாதார துறையினர் தினந்தொறும் கொரோனா உறுதி செய்யபட்டவர்களை சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தாலும் அங்கே போதிய படுக்கை வசதியில்லை என கூறி மருத்துவர்கள் திருப்பி அனுப்பி விடுகின்றனர்.

தினந்தோறும் வேலூர் மருத்துவமனைக்கு அனுப்புபவர்களில் பாதி நோயாளிகள் திருப்பி அனுப்பப்படுவதால் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர்கள் அவர்களுக்கு மாத்திரைகளை வழங்கி வீட்டிலே தனிமையில் இருந்து கொள்ளும்படி அறவுறுத்தி அனுப்பி வருகின்றனர்.

கடந்த ஆண்டே அணைக்கட்டு அரசு பொது மருத்துவமனையில் கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க 30 படுக்கைகள் கொண்ட தனிவார்டு ஏற்படுத்தபட்ட நிலையில், அதற்கென போதிய டாக்டர்கள், நர்சுகள் இல்லாததால் செயல்படாத நிலை ஏற்பட்டு முடங்கியது.

தற்போது கொரோனா 2வது அவலை வேகமாக பரவி தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், அணைக்கட்டு தாலுகா அரசு மருத்துவமனையில் 30 படுக்கை வசதிகளுடன் அமைக்கப்பட்டு பயன்பாடின்றி கிடக்கும் கொரோனா வார்டை திறந்து அதில் பணியாற்றுவதற்கு போதிய டாக்டர்கள், நர்சுகளை நியமிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து மருத்துவ அலுவலர்கள் கூறுகையில், `அணைக்கட்டு தாலுகா அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டை திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வருவது சம்பந்தமாக மாவட்ட சுகாதார துறை அதிகாரிகளிடம் கேட்கப்பட்டுள்ளது, போதுமான அளவுக்கு அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியில்லாத நிலையில், ஆக்சிஜன் வசதி ஏற்படுத்தபட்டு அனுமதி கிடைத்தவுடன் கொரோனா வார்டு பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்யப்படும் என்றனர்.

Related Stories: