போச்சம்பள்ளி அருகே பலத்த சூறை காற்று 5 டன் மாங்காய் உதிர்ந்து நாசம்

போச்சம்பள்ளி : போச்சம்பள்ளி அடுத்த ஜிங்கல்கதிரம்பட்டியில், பலத்த சூறைக்காற்றில் 5 டன் அளவிற்கு மாங்காய்கள் உதிர்ந்து நாசமானது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 40 ஆயிரம் எக்டர் பரப்பில் மா சாகுபடி செய்யப்படுகிறது.  தோத்தாபுரி ரகம் 60 சதவீதமும், செந்தூரா மற்றும் நீலம் ரகங்கள் 30 சதவீதமும், அல்போன்சா 5 சதவீதமும் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இவை தவிர பீத்தர், மல்கோவா, பங்கனபள்ளி போன்றவை 5 சதவீதம் சாகுபடி செய்யப்படுகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தை ெபாறுத்த வரை மா விளைச்சலில் போச்சம்பள்ளி தாலுகா 2வது இடத்தில் உள்ளது. இங்கு சாகுபடி செய்யப்படும் மாங்காய்களை வெளி மாநிலம் மற்றும் மாவட்டத்தில் உள்ள மா ஜூஸ் கம்பெனிகளுக்கு அனுப்பி வைக்கின்றனர். இதனால் செலவு போக நல்ல வருவாய் கிடைத்து வந்தது.

மார்ச், ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் மட்டுமே மாம்பழ விளைச்சல் அதிகரித்து காணப்படும். இந்நிலையில் தற்போது கொரோனா 2ம் அலை  பரவலால் மா விவசாயிகள் தோட்டங்களில் காய்த்துள்ள மாங்காய்களை வியாபாரிகள் வந்து வாங்கி செல்வார்கள் என நம்பி அறுவடை செய்யாமல்  விட்டு வைத்திருந்தனர். இந்நிலையில் நேற்று மாலை போச்சம்பள்ளி அருகே ஜிங்கல்கதிரம்பட்டி பகுதியில் பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இதனால் மா மரங்களில் பறிக்கமால் விட்டிருந்த அனைத்து மாங்காய்களும் சூறாவளி காற்றுக்கு உதிர்ந்து கீழே விழுந்தன.

இதில் சுமார் 5 டன் அளவிற்கு மாங்காய்கள் சேதமானதாக விவசாயிகள் தெரிவித்தனர். இதனால் மா விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. உதிர்ந்து கீழே விழுந்த மாங்காய்களை விவசாயிகள் கூலி கொடுத்து மண்டிகளுக்கு எடுத்துச் சென்று விற்றாலும் குறைவான விலை கிடைக்கும் என்பதால், விவசாயிகள் மாங்காய்களை தோட்டங்களிலே விட்டு வைத்துள்ளனர்.

Related Stories: