அரசின் நடவடிக்கைகளுக்கு அதிகாரிகள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்-அமைச்சர் எஸ்.ரகுபதி வேண்டுகோள்

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கோவிட் நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அரசுத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நேற்று நடந்தது.அமைச்சர்கள் எஸ்.ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர் தலைமை வகித்தனர். கலெக்டர் உமாமகேஸ்வரி முன்னிலை வகித்தார். எம்எல்ஏ முத்துராஜா, எஸ்பி பாலாஜி சரவணன், டிஆர்ஓ சரவணன், அறந்தாங்கி சப்-கலெக்டர் ஆனந்த் மோகன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சந்தோஷ்குமார், அரசு மருத்துவக்கல்லூரி டீன் பூவதி மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் அமைச்சர் ரகுபதி பேசியதாவது:கொரோனா தடுப்பில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், பொதுமக்கள் ஒத்துழைப்பு மிக முக்கியமாகும். முன்னெச்சரிக்கை பணிகளை அவசியம் பின்பற்ற வேண்டும். கொரோனா குறித்து பொதுமக்கள் கவனக்குறைவாக இருப்பதால், ஊராட்சி அளவில் பொதுமக்களிடையே உரிய விழிப்புணர்வை அலுவலர்கள் ஏற்படுத்த வேண்டும்.

​மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பணி மகத்தானது. தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை உள்ள நிலையில் அங்கிருந்து வரும் அனைத்து நோயாளிகளும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகின்றனர். நோயாளிகளை விரைவில் மருத்துவமனையில் அனுமதித்து உரிய சிகிச்சைகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். நோயாளிகளை காத்திருக்க வைக்காமல் விரைவான சிகிச்சை வழங்குவதை மருத்துவர்கள் உறுதி செய்ய வேண்டும்.

கொரோனா அறிகுறிகள் தென்பட்டால் ஆரம்ப நிலையிலேயே பரிசோதனை செய்து மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரவேண்டும். இதனால் உயிர் இழப்புகளை தவிர்க்கலாம். மருத்துவ சிகிச்சைக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்ய தயார் நிலையில் உள்ளோம். கொரோனா தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்கும் வகையில், அரசின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் அலுவலர்கள் முழு ஒத்துழைப்பு வழங்கி ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும். இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்ததாவது:நோயாளிகளுக்கு மருத்துவர்கள் மன தைரியத்தை ஏற்படுத்த வேண்டும்.​எனவே கொரோனா தடுப்பு பணிகளில் மனசாட்சியுடன் செயல்பட அறிவுறுத்துகிறேன். கடந்த காலங்களில் கொரோனா தொற்றிலிருந்து மீள்வதற்கு உள்ளாட்சித்துறை, வருவாய்த்துறை, காவல்துறை, சுகாதாரத்துறை போன்ற துறைகள் இணைந்து பணிகளை மேற்கொண்டது.

அதேபோல தற்பொழுதும் இத்துறைகள் செயல்பட வேண்டும். உள்ளாட்சித்துறை அலுவலர்கள் கொரோனா தடுப்பு பணிகளை சம்மந்தப்பட்ட பகுதிகளில் மக்கள் பிரதிநிதிகளுடன் இணைந்து மேற்கொள்ள வேண்டும்.தற்பொழுது கொரோனா நோயாளிகளுக்கான புதிய சிகிச்சை முறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது என்றார்.

Related Stories: