×

கொரோனா நோயாளிகளுக்கு இலவச சேவை மதுரை ஆட்டோ டிரைவருக்கு முதல்வர் பாராட்டு கடிதம்

மதுரை : கொரோனா நோயாளிகளுக்கு இலவச சேவை வழங்கி வரும் மதுரை ஆட்டோ டிரைவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு கடிதம் அனுப்பியுள்ளார்.மதுரை மேல அனுப்பானடியை சேர்ந்தவர் குருராஜ்(35). ஆட்டோ டிரைவர். இவர் கொரோனா நோயாளிகளை இலவசமாக மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்கிறார்.

இதுகுறித்த செய்தி தினகரனில் நேற்று வெளியானது. இதனைத்தொடர்ந்து, ஆட்டோ டிரைவர் குருராஜின் சேவையை பாராட்டி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மாவட்ட கலெக்டர் அன்பழகனுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.அதில், “மதுரை அனுப்பானடியில் ஆட்டோ ஓட்டுநராக உள்ள தங்களின் தொடர்ச்சியான மக்கள் சேவை பாராட்டுக்குரியது. கொரோனா முதல் அலையின் போதும், தற்போது மிகக்கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி வரும் இரண்டாவது அலையிலும் தங்களின் ஆட்டோ மூலம் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களையும், பிற நோயாளிகளையும் மருத்துவமனைக்கு கட்டணம் ஏதுமின்றி அழைத்துச்சென்று, உயிர்காக்கும் உன்னதான பணியை தொடர்ந்து மேற்கொண்டு வருவதை அறிந்து மகிழ்கிறேன்.

ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில், மாவட்ட நிர்வாகத்திடம் உரிய அனுமதி பெற்று, நோயாளிகளையும், ரயில் பயணிகளையும் இலவசமாக அழைத்துச்செல்லும் தன்னார்வலராக தாங்கள் மேற்கொண்டுள்ள பணி போற்றுதலுக்குரியது. தங்கள் பணியால் ஈர்க்கப்பட்டு, இப்பணியில் ஈடுபட்டுள்ள தங்கள் நண்பர் அன்புநாதன் அவர்களும் பாராட்டுக்குரியவர்.

பேரிடர் காலம் எனும் போர்க்களத்தில் தமிழக அரசு மேற்கொண்டுள்ள போர்க்கால நடவடிக்கைகளுக்கு துணைநிற்கும் வகையில் தாங்கள் மேற்கொண்டுள்ள சேவையை அரசின் சார்பில் பாராட்டுகிறேன். தாங்களும், குடும்பத்தினரும் நோய்த்தொற்றுக்கான பாதுகாப்பு நடைமுறைகளை கடைப்பிடித்து நலமுடன் வாழ வாழ்த்துகிறேன்” என தெரிவித்துள்ளார். இந்த பாராட்டு கடிதம், ஆட்டோ டிரைவர் குருராஜிடம் இன்று மாவட்ட நிர்வாகத்தால் ஒப்படைக்கப்பட உள்ளது.

Tags : Chief Minister ,Madurai Auto Driver ,Corona , Madurai: Chief Minister MK Stalin's letter of appreciation to the Madurai auto driver who has been providing free service to corona patients
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...