தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இயந்திர கோளாறால் ஆக்சிஜன் உற்பத்தி திடீர் நிறுத்தம் : தமிழக அரசு அதிர்ச்சி!!.

தூத்துக்குடி : இயந்திர கோளாறு காரணமாக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி இன்று திடீரென நிறுத்தப்பட்டது. மீண்டும் ஆக்சிஜன் கிடைக்க 3 நாட்கள் ஆகும் என ஸ்டெர்லைட் ஆலையின் தாய் நிறுவனமான வேதாந்தா நிறுவனம் சுற்றிக்கை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.  நாட்டில் நிலவும் ஆக்சிஜன் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்க அனுமதிக்க வேண்டும் என்று வேதாந்தா குழுமம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டது.

மத்திய, மாநில அரசுகளின் கருத்துக்களை கேட்டறிந்த சுப்ரீம் கோர்ட், ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதி வழங்கியது. இதையடுத்து ஆலையின் ஆக்சிஜன் உற்பத்தி பிரிவில் ஏற்கனவே பணியில் இருந்த 300க்கும் மேற்பட்ட ஊழியர்கள் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையில் நேற்று முன்தினம் இரவில் ஆக்சிஜன் உற்பத்தி முழுமையாக தொடங்கியது. உற்பத்தி செய்யப்பட்ட ஆக்சிஜன் ஆய்வுக்குழுவினரால் பரிசோதிக்கப்பட்ட நிலையில் அது 98.62 சதவீதம் சுத்தமானதாக இருப்பதாக உறுதி செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து முதல் கட்டமாக உற்பத்தி செய்யப்பட்ட 4.8 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் நேற்று காலை லாரி மூலம் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. ஆக்சிஜன் உற்பத்தி பணியை கலெக்டர் செந்தில்ராஜ் கொடியசைத்து ெதாடங்கி வைத்தார்.இந்நிலையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இன்று திடீரென ஆக்சிஜன் உற்பத்தி இயந்திரம் பழுதானது. நேற்றிரவு 5 டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென இயந்திரம் பழுதானதால் ஆக்சிஜன் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. 3 ஆண்டுகளாக இயந்திரங்கள் இயக்கப்படாததால் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும் இந்த கோளாறு விரைவில் சரி செய்யப்பட்டு மீண்டும் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.அந்த இயந்திரத்தின் பழுதை சீரமைக்கும் பணியில் வல்லுநர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த பழுது சரியாக இன்னும் 3 நாட்கள் ஆகும் என்றும், அதன்பின்னரே ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியாகும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: