கூட்ட நெரிசலைத் தவிர்ப்பதற்காக நேரு உள்விளையாட்டு அரங்கில் நாளை முதல் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை!!

சென்னை : கூட்ட நெரிசலைத் தவிர்ப்பதற்காக சென்னை நேரு உள்விளையாட் டரங்கில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை நாளை முதல் தொடங்கப்பட உள்ளது. மொத்தம் 4 கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டு விற்பனை நடைபெறும் என தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் தெரிவித்துள்ளது.அண்மைக் காலமாக கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை கட்டுக்கடங்காத வகையில் அதிகரித்து வரும் நிலையில், ரெம்டெசிவிர்,டோஸிலிசுமேப் மருந்துகளின் தேவை பலமடங்கு உயர்ந்துள்ளது.

பெரும்பாலான தனியார் மருத்துவமனைகளில் அந்த மருந்துகள் தட்டுப்பாடாக உள்ள நிலையில், அவற்றை வாங்குவதற்காக நோயாளிகளும், அவர்களது உறவினர்களும் அலைமோதும் சூழல் எழுந்துள்ளது. மற்றொருபுறம் அந்த மருந்துகளை கள்ளச்சந்தையில் கூடுதல் விலைக்கு விற்கும் சட்டவிரோத செயல்பாடுகளும் கண்டறியப்பட்டுள்ளன.இதைத் தடுக்க அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், ரெம்டெசிவிர், டோஸிலிசுமேப் மருந்துகள் தேவைப்படுவோர், அரசிடம் பெற்று கொள்ளலாம் என, தமிழக மருத்து வப் பணிகள் கழகம் அறிவித்தது.

இதற்காக, சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் அண்மையில் மருந்தகம் ஒன்று அமைக்கப்பட்டது. அங்கு உரிய ஆவணங் களைக் காட்டி, மருந்துகளைப் பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அந்த மருந்தை வாங்குவதற்காக மக்கள் கூட்டம் அலைமோதியது. இந்த நிலையில் கூட்ட நெரிசலைத் தவிர்ப்பதற்காக சென்னையில் கீழ்ப்பாக்கத்திற்கு பதில் நேரு ஸ்டேடியத்தில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்யப்பட உள்ளது.

*சிறப்பு விளையாட்டு ஆண்கள் விடுதியில் காலை 9 மணி முதல் தினமும் 300 பேருக்கு ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்யப்பட உள்ளது.

*நேரு ஸ்டேடியத்தின் 5வது நுழைவு வாயில் (மை லேடி பூங்கா ) வழியாக மக்கள் உள்ளே அனுமதிக்கப்படுவர்.

*ரெம்டெசிவிர் மருந்து வாங்கிய பிறகு 4வது வாயில் வழியாக மக்கள் வெளியேற அனுமதிக்கப்படுவர்.

*ரெம்டெசிவிருக்காக இடைத்தரகர்கள் யாரையும் அணுக வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Related Stories: